சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் தள்ளுபடி
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளோம். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து பின் சிபிஐ காவல்துறையினர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் உள்ள 105 சாட்சிகளில் 30 பேரை மட்டுமே இதுவரை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரித்து உள்ளனர்.
20 மாதங்களுக்கும் மேலாக நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப் பட்டுள்ளோம். விசாரணை முடியும் வரை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில், ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அணுகலாம் என கூறி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு
வியாபாரியிடம் 10 லட்சம் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில், காவல் ஆய்வாளர் வசந்தி மீதான குற்ற வழக்கு விசாரணையும், அதே சமயத்தில் துறைதுறை ரீதியான விசாரணையும் தொடரலாம் என தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை துறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைக்கக்கோரி வசந்தி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
வியாபாரியிடம் 10 லட்சம் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மதுரையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் வசந்தி தற்போது ஜாமினில் உள்ளார். இவர் மீதான குற்றவழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தன் மீதான குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை, துறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைக்கக் கோரி வசந்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘என் மீதான புகார் புனையப்பட்டது. என் மீதான காழ்ப்புணர்ச்சியில் சிலர் இந்த பிரச்சனையில் என்னை சிக்கவைத்துள்ளனர். குற்ற வழக்கு விசாரணை முழுமையாக முடிந்தால்தான் உண்மை தெரியவரும். ஆகவே குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை துறைதுறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, ’குற்ற வழக்கு விசாரணை முடிய எவ்வளவு காலம் ஆகும் என தெரியாது. சில வழக்குகளில் விதிவிலக்குகள் இருக்கும் போது, விசாரணை முடியும் வரை துறை ரீதியான விசாரணை நிறுத்திவைக்கப்படும். இந்த வழக்கில் அது போல விதிவிலக்குகள் எதுவும் இல்லை. ஆகவே குற்ற வழக்கு விசாரணையும், அதே சமயத்தில் துறைதுறை ரீதியான விசாரணையும் தொடரலாம் என குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்