உடைந்து கிடக்கும் பாலம்: கோரிக்கை வைக்கும் மேலூர் பகுதி மக்கள்! கவுன்சிலர் சொன்னது என்ன?
”எங்கள் பகுதியில் அதிகளவு மாட்டு இறைச்சிக் கடை செயல்படுவதால், தீண்டாமை காரணமாக ஒதுக்கப்படுகிறோமா என்று தெரியாத நிலையுள்ளது. - என்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிப் பகுதியில் உள்ளது அண்ணாகாலனி. 6-வது வார்டுக்கு உட்பட்டு வரும் இந்த பகுதியில் அதிகளவு இறைச்சிக் கடை செயல்படுகிறது. அதிகளவு பொதுமக்கள் வசிக்கும் இந்த பகுதியில் பல்வேறு அடிப்படை பிரச்னை உள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சூழலில் அண்ணாகாலனி முக்கிய வீதியில் உள்ள பாலம் ஒன்று உடைந்து ஒரு வருடத்திற்கு மேலாக சரிசெய்யப்படாமல் இருப்பதாக ஏ.பி.பி., நாடு புகார் பெட்டிக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
- Crime: திருடிய நகை, பணத்தை நூதன முறையில் மீட்ட மக்கள்; மதுரையில் அடுத்தடுத்து நடக்கும் நெகிழ்ச்சி
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில்..., " எங்கள் வார்டு அண்ணாகாலனி பகுதியில் அதிகளவு பொதுமக்கள் வசித்து வருகிறோம். ஆனால் அடிப்படை வசதியான தூய்மை பணி கூட முறையாக செய்வதில்லை. எல்லா இடங்களுக்கும் 2 நபர்கள் என்றால் எங்கள் ஏரியாவிற்கு ஒரே ஒரு நபர் தான் அனுப்பி வைக்கப்படுகிறார். இதனால் எங்கள் பகுதி சுகாதாரம் குறைந்த பகுதியாக உள்ளது. எங்கள் பகுதியில் அதிகளவு மாட்டு இறைச்சிக் கடை செயல்படுவதால் தீண்டாமை காரணமாக ஒதுக்கப்படுகிறோமா என்று தெரியாத நிலையுள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக உடைந்த பாலம் தற்போது வரை சரி செய்யப்படாமல் இருந்துவருகிறது.
இந்த பகுதியில் அதிகளவு இருசக்கர வாகனம் செல்லும். பள்ளி மாணவர்கள், குழந்தைகள், முதியவர்கள் என அதிகளவு பொதுமக்கள் நடமாடும் பகுதியில் பாலம் பாதி உடைந்த நிலையில் இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. உயிர் சேதம் நடக்கும் முன் இதனை எங்களுக்கு சரி செய்து கொடுக்க வேண்டும். எங்கள் பகுதி கவுன்சிலர் மீனாட்சி தேர்தல் சமயத்தில் வந்தார். அதோடு சரி எங்கள் பகுதி பிரச்னைகள் பார்க்க வருவதே இல்லை. எனவே பாலம் சரி செய்யும் பிரச்னையை முக்கியமாக கருதி சரி செய்ய வேண்டும். அதே போல் மேலூர் நகராட்சி முழுவதற்கும் குடி தண்ணீர் சப்ளை செய்யும் வாட்டர் டேங் எங்கள் பகுதியில் தான் உள்ளது. அதனை உரிய நேரத்தில் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்பதும் எங்களுடைய கோரிக்கையா உள்ளது" என்றனர்.
இது குறித்து மேலூர் நகராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் மீனாட்சியிடம் பேசினோம்...," என்னுடைய வார்டில் அடிக்கடி பிரச்னைகளை சரி செய்து வருகிறோம். இதற்கு முன்பு கவுன்சிலர்கள் இல்லாமல் நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வந்தது. அதனால் தற்போது பணிகளில் தொய்வு இருக்கிறது. இருந்தபோதிலும் அடிப்படை பிரச்னைகளை விரைவாக சரி செய்து வருகிறோம். உடைந்த பாலத்தை உடனடியாக சரி செய்ய ஏற்பாடு செய்கிறோம்" என நம்பிக்கை தெரிவித்தார்.