மீதத்தொகைக்கு கங்கை தீர்த்தம் பெற்றுக்கொள்ளுமாறு நிர்பந்தித்த தபால் நிலையம் - அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றங்கள்
”வாடிக்கையாளர்களிடம் அதிகாரிகள் சிரித்த முகத்தோடு பேச வேண்டும். ஆயிரம் பிரஷர், டென்சன் இருந்தாலும் அதனை வாடிக்கையாளர்கள் மேல் காட்டக்கூடாது - மதுரை மாநில நுகர்வோர் ஆணையம்”
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரம்மா. இவர் கடந்த 27.08.16 அன்று நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள தபால் நிலையத்தில் பதிவு தபால் ஒன்று அனுப்பியுள்ளார். அதற்கான தொகை ரூ.25 கேட்டுள்ளனர். அப்போது பிரம்மா தன்னிடம் இருந்த 100 ரூபாயை கொடுத்துள்ளார். பதிவு தபால் கட்டணம் ரூபாய் 25/- போக மீதி ரூபாய் 75 சில்லறை இல்லை என கவுன்டரில் உள்ள அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் 25 ரூபாய் சில்லறை கொடுத்து விட்டு 100 ரூபாயை பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்து உள்ளனர்.
100 ரூபாயை கொடுங்கள் சில்லறை மாற்றி தருகிறேன் என பிரம்மா தெரிவித்துள்ளார். சில்லறை இல்லையென்றால் கங்கை தீர்த்தம் இருக்கிறது பெற்றுக்கொள்ளுமாறு நிர்பந்தம் செய்துள்ளனர், மனுதாரர் மறுத்து அங்கு உள்ள புகார் புத்தகத்தில் புகார் எழுதி வைத்துள்ளார், அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் மீண்டும் பிரம்மா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கும் பதில் இல்லாததால் இது குறித்து நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளார்.
பின்னர் வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் எதிர்தரப்பினர் மூன்று பேரும் சேர்ந்து மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 4,000 ரூபாயும், வழக்குச் செலவு 2000 ரூபாயும், மேலும் மனுதாரர் மீத ரூபாய் 75 சேர்த்து மொத்தம் 6 ஆயிரத்து 75 /-வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2018 ஆம் தேதி எதிர்த்தரப்பினர்கள் மதுரை மாநில நுகர்வோர் ஆணையத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். தற்போது அந்த மேல்முறையீட்டீன் மீதான மனுவை விசாரித்த ஆணையம் வாடிக்கையாளர்களிடம் அதிகாரிகள் சிரித்த முகத்தோடு பேச வேண்டும். ஆயிரம் பிரஷர், டென்சன் இருந்தாலும் அதனை வாடிக்கையாளர்கள் மேல் காட்டக்கூடாது. அவருடைய 75 ரூபாய் உங்களிடம் இருப்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள். அதனை திரும்ப கொடுக்க நீங்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை
அவர் கொடுத்த புகாரின் பேரில் போஸ்ட்மாஸ்டரே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், பின்னரும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கான நடவடிக்கையாவது அதிகாரிகள் எடுத்திருக்க வேண்டும். எனவே மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு செல்லும் எனவும், மேலும் மேல்முறையீடு செய்த வகையில் 1000 ரூபாய் கூடுதலாக வழக்கறிஞர் பிரம்மாவுக்கு வழங்க வேண்டும் என்றும், மொத்தம் ரூபாய் 7075 /-வழங்க வேண்டும் என்றும், இந்த பணத்தினை தபால்துறை கொடுத்துவிட்டு இதில் சம்பந்தப்பட்ட அதிகாரியுடைய சம்பள பணத்திலிரூந்து பிடித்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள் மக்கள் சேவை என்ற நிலையில் இருந்து மாறாமல் வாடிக்கையாளரே கடவுள் என்ற காந்திய கோட்பாட்டின்படி செயல்பட்டு மக்களுக்கான சேவைகளை மகிழ்வோடு தர வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ள தீர்ப்பு வரவேற்பை பெற்றுள்ளது.