pongal 2026 : பொங்கல் களைகட்டிய திண்டுக்கல்: பூக்களின் விலை விண்ணை தொட்டது!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் பூக்கள் சந்தையில் மல்லிகைப் பூக்கள் கிலோ ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் போகி பண்டிகை முடிந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட திண்டுக்கல் மாநகர், ஊரக பகுதி மக்கள் பெரிய கடைவீதி, பஜார், தெற்கு ரதவீதி பகுதிகளில் குவிந்த நிலையில் புதிய ஆடை, தித்திக்கும் கரும்பு, மஞ்சள், காப்புக்கட்டுப்பூ, பல்வகை வண்ணங்களிலான கோலப் போடிகளை வாங்கி சென்றனர்.
ஜனவரி 15, 16, 17 ல் பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என மூன்று நாட்கள் விடுமுறை உள்ள நிலையில் நேற்று (ஜன.14) போகியை யொட்டி விடுமுறை அளித்து உத்தரவிட்டது. இதனால் திண்டுக்கல்லில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், உள்ளூர் மக்கள் அவரவர் ஊர்களுக்கு சென்றனர்.
திண்டுக்கல் மாநகர், ஊரக பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடும்பத்தினரும் திண்டுக்கல் நகரின் பெரியகடைவீதி, பஜார் பகுதி, தெற்கு ரத வீதி, பழைய சந்தைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்ட தித்திக்கும் கரும்பு, மஞ்சள், காப்புக்கட்டுப் பூ, புத்தாடைகள், மண் சட்டியிலான பொங்கல் பானைகள், கொடி அடுப்பு (இருபானைகள் அடுப்பு), ஒத்த மண் அடுப்பு, கயிறுபிருமணை, தேங்காய் சிரட்டையிலான அகப்பை, அலங்கரிக்கப்பட்ட சுடப்பட்ட மண்ணாலான பொங்கல் பானைகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். பண்டிகை காலம் என்பதால் பெரிய கடைவீதி, மாநகராட்சி பகுதி, தெற்கு ரத வீதி, மலைக்கோயில் அடிவாரம், திருச்சி ரோடு, பூ மார்க்கெட், நத்தம் மேம்பாலப் பகுதி, பழநி ரோடு, தரகு மண்டி பகுதிகளிலும் மக்கள் டூவீலர், கார் உள்ளிட்டவற்றில் அதிகளவில் வந்து சென்றனர். இதனால் அதிக இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில், திண்டுக்கல் பூக்கள் சந்தைக்கு ஏ.வெள்ளோடு, தவசிமடை, சாணாா்பட்டி, ஆவாரம்பட்டி, மைலாப்பூா், மாரம்பாடி உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. திண்டுக்கல் சந்தையிலிருந்து திருச்சி, கரூா், சேலம், கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை சந்தையில் மல்லிகைப் பூக்கள் விலை கிலோ ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
பனியின் தாக்கம் காரணமாக வரத்துக் குறைவாக இருந்ததால் கடந்த ஒரு வாரமாகவே மல்லிகைப் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே, திண்டுக்கல் பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் மழையாலும் பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மல்லிகைப் பூக்கள் மட்டுமன்றி முல்லை, காக்கரட்டான் உள்ளிட்ட அனைத்து வகையான பூக்களின் விலையும் அதிகரித்தது. (விலை கிலோவில்) முல்லை ரூ.2,500, ஜாதிப் பூ ரூ.1,700, காக்கரட்டான் ரூ.1,500, கனகாம்பரம் ரூ.1,500, அரளி ரூ.350, பன்னீா் ரோஸ் ரூ.120, சம்மங்கி ரூ.250, செவ்வந்தி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.





















