நீதிமன்றத்தில் வேலை செய்யும் பெண்ணின் மகன் நீதிபதியாக தேர்வு - பழனியில் நெகிழ்ச்சி
நீதிபதி வரும்போது எழுந்து நின்று வணக்கம் சொன்ன தாய்க்கு நீதிபதியாக வந்து பெருமை சேர்த்த மகன்.
தமிழகத்தில் சிவில் நீதிபதிகள் பதவிக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடந்து முடிந்தது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தெற்கு அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகன் 28 வயதான சக்தி நாராயணமூர்த்தி சிவில் நீதிபதி தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவர் தந்தை கடந்த 15 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.
இவர் சகோதரர் பழனியில் பட்டாலியன் பயிற்சி பள்ளியில் காவலராக பணியாற்றி வருகிறார். சக்தி நாராயணமூர்த்தி தாய் ஜெயலட்சுமி நீதிமன்றத்தில் உதவியாளராக கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். சிறுவயது முதலில் இருந்து தனது தாய் நீதிமன்றத்தில் வேலை செய்வதை பார்த்து வந்தவர். நீதிபதி வரும்போது தனது தாயும் அனைவரும் எழுந்து நிற்பதை பார்த்து பின்னாளில் நீதிபதியாக வேண்டும் என்று எண்ணம் மனதில் தோன்றியதாகவும் அதனால் சிறு வயது முதலே நீதிபதி தேர்வுக்கு ஆயத்தமாக பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும், அதனால் கல்லூரி படிப்பை முடித்துக் கொண்டு பின்பு சென்னையில் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டப் படிப்பை முடித்து பின்பு பழனியில் பயிற்சி வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். பணிபுரிந்து வந்து கொண்டிருக்கும்போது அவர் 2019 ஆம் ஆண்டு சிவில் நீதிபதி தேர்வுக்கு தேர்வு எழுதி தோற்று விட்டார்.
பின்பு. சிவில் நீதிபதி தேர்வுக்கு பயிற்சி எடுத்து சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றார். இதுகுறித்து அவர் கூறும்போது, சிறுவயது முதல் தனது தாயைப் பார்த்து வளர்ந்ததாகவும் நீதிமன்றத்தில் பணிபுரிவதால் நீதிபதிக்கு உரிய மரியாதை கிடைப்பதால் நீதிபதியாக வேண்டும் எனவும் தான் உணர்ந்ததாகவும் கூறினார். நீதிபதி முதல் கட்ட தேர்வில் தோல்வி பெற்ற பின்பு இரண்டாம் கட்ட தேர்வுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது அவரது மனைவிக்கு இரட்டை குழந்தை பிறந்து விட்டது.
இதனால் குழந்தையை மனைவியும் கவனித்துக் கொண்டே தான் இரண்டாம் கட்ட தேர்வுக்கு பயிற்சி பெற்றதாகும் தற்போது தேர்வில் வெற்றி பெற்றதால் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தனது தாய்க்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் கூறினார். நீதிபதி வரும்போது எழுந்து நின்று வணக்கம் சொன்ன தாய்க்கு நீதிபதியாக வந்து பெருமை சேர்த்த மகனால் பழனி மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.