கையில் அரிவாளுடன் நடந்து சென்ற சிறுவர்கள்; பழனி அருகே பரபரப்பு..!
பழனி நகராட்சிகுட்பட்ட முக்கிய பகுதியில் 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கையில் அரிவாளுடன் நடந்து சென்றது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழனி நகரின் முக்கிய பகுதியில் 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கையில் அரிவாளுடன் நடந்து சென்றது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட அடிவாரம் பகுதியில் உள்ளது குறும்பபட்டி. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் குறும்பபட்டி பகுதியில் உள்ள தெருக்களில் 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கையில் அரிவாளுடன் சர்வ சாதாரணமாக நடந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது:- அடிவாரம் குறும்பபட்டியில் தினமும் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதாகவும், கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிறுவர்கள் கூச்சலிட்டபடியே நடந்து செல்வதாகவும், இவர்கள் அனைவரும் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள்தான் என்றும் தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற காரணங்களால் இரவு 9 மணிக்கு மேல் இப்பகுதி பெண்கள் யாருமே வெளியே செல்வதில்லை என்றும்,
மீறி சென்றால் உயிருடன் திரும்பி வருவோமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். பழனியில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் சிறுவர்கள் ஆயுதங்களுடன் நடமாடி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில நாட்களில் சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் நிலையில் பழனி அடிவாரம் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் வருகையும் அதிகரிக்கும். இந்நிலையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
பழனியில் மதக் கலவரத்தை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் போலியான தகவலை பரப்பிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மதினா நகரை சேர்ந்தவர் சாதிக் அலி. இவர் நேற்று முன்தினம் அவரது செல்போனில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்று வைத்திருந்தார். தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த அந்த லெட்டர்பேடில், யாராவது உங்கள் வீட்டின் வாசலுக்கு வந்து மருத்துவக் கல்லூரியில் இருந்து வருகிறோம். உங்களுக்கு இலவசமாக சுகர் டெஸ்ட் எடுக்கிறோம் என கூறினால் அவர்களை விரட்டி அனுப்புங்கள்
அல்லது காவல்துறையிடம் புகார் அளியுங்கள் என்றும், அவர்கள் ஹிந்து ஆர்எஸ்எஸ் தீவிரவாத அமைப்பினால் எய்ட்ஸ் வைரஸை பரப்புவதற்காக அனுப்பப்பட்டவர்கள், எனவே இதை பார்த்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் இதை பகிர்ந்து கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த லெட்டர் பேடில் இப்படிக்கு தமிழ்நாடு காவல்துறை என சீல் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவலறிந்த காவல்துறையினர் சாதிக் அலியை பிடித்து விசாரணை செய்தனர்.
தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு போல போலியான லெட்டர்பேடு வைத்த சாதிக்அலி மீது மத வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் தகவல் பரப்பியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சாதிக் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது போன்ற வன்முறையை தூண்டும் வகையில் உள்நோக்கத்துடன் பதிவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர். இச்சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.