பழனி அருகே பயிர்களை சேதம் செய்த காட்டுயானை - விவசாயிகள் கவலை
பழனியருகே விளைநிலங்களில் புகுந்த காட்டுயானைகள் பயிர்களை சேதம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கணக்கன்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பைப்பட்டி கிராமம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் மக்காச்சோளம், வெள்ளைச் சோளம் மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக வனப்பகுதியில் உள்ள யானைகள், காட்டுப்பன்றிகள் அவ்வப்போது விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கோம்பைப்பட்டியில் குணசேகரன் என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மக்குச்சோளம், தென்னை மற்றும் வாழைப் பயிர்களை பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குணசேகரனுடைய விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டுயானை ஒன்று பயிர்களை நாசம் செய்தது. இதனால் பயிர்கள் அனைத்தும் சேதமானது. வனவிலங்குகள் ஊருக்குள் புகாமல் இருக்க வனத்துறையால் அமைக்கப்பட்ட அகழிகள் அனைத்தும் தூர்ந்து போய் மண்மேடாக உள்ளது. இதன்காரணமாக விலங்குகள் எளிதாக உள்ளே புகுந்தது பயிர்களை நாசம் செய்கின்றன.
காடடுயானைகள் அட்டகாசம் குறித்து பலமுறை வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதற்கு முன்பு விலங்குகள் சேதப்படுத்திய பயிர்களுக்கே இதுவரை இழப்பீடு தராத நிலையில், தற்போது மீண்டும் பயிர்களை யானைகள் நாசம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளையும், பயிர்களையும் விலங்குகள் நாசம் செய்யாத வகையில் ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்