Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? என்று அமைச்சர் கோவி செழியன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய கல்வி நிறுவனமும், இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் பல்கலைக்கழகமாகவும் திகழ்வது அண்ணா பல்கலைக்கழகம் ஆகும். தமிழ்நாட்டின் அடையாளமாக திகழும் இந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே, பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞானசேகரன் உள்ளே வந்தது எப்படி?
இந்த சம்பவம் தொடர்பாக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறி, ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று நிருபர்களைச் சந்தித்தார்.
அப்போது, அவர் பல்கலைக்கழகத்தில் உள்ள கேமராக்கள் 80 சதவீதம் வேலை செய்கின்றன. பல்கலைக்கழகத்தில் உள்ள கேமராக்கள் எங்கெங்கு வேலை செய்கிறது? எங்கெங்கு வேலை செய்யவில்லை என்று ஆய்வு செய்து வருகிறோம்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் ஏதும் இல்லை. ஞானசேகரனின் மனைவி அண்ணா பல்கலைக்கழக ஊழியர். அதனால் அவரை விட்டுச் செல்லவும், அவரை மீண்டும் அழைத்துச் செல்லவும் ஞானசேகரன் வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் பல்கலைக்கழகத்திற்குள் வந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் இணையத்தில் கசிந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தீவிர விசாரணை:
மாணவியின் எதிர்கால நலன், மாணவியின் கல்விக்கு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு தற்போது 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஞானசேகரனுக்கு 4 மனைவிகள் உள்ளனர். அதில் ஒரு மனைவியே அண்ணா பல்கலைக்கழக ஊழியர் ஆவார். இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும், ஜாமின் வழங்கவே கூடாது என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கவும், வெளியாட்கள் உள்ளே செல்வதைத் தவிர்க்கவும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்காெள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை மேலும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது ஏற்கனவே 15 வழக்குகள் உள்ள நிலையில், அவர் வேறு ஏதேனும் பல்கலைக்கழக மாணவியையோ அல்லது பெண்ணையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.