ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத் மீதான வழக்குக்கு தடைவிதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
தேனி மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி அளித்த புகாரில் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் மீது பதிவான வழக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின்போது குறிப்பிட்ட சில விபரங்களை மறைத்ததாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர்கள் மீது தனித்தனியாக மக்கள் பிரநிதித்துவச் சட்டம் 125 ஏ-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் மிலானி என்பவர் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 7க்குள் முடித்து, விசாரணை இறுதி அறிக்கையை தனி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் புகார்தாரர் மிலானி, ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவி எம்.பி ஆகிய இருவரும் சொத்து விவரங்களை மறைத்து பொய்யான தகவல்கள் அளித்ததாக கூறி அதற்கு பல ஆவணங்களை போலீசாரிடம் சமர்ப்பித்தார். அதன் உண்மை தன்மை குறித்தும், ஓ.பன்னீர்செல்வம், ப.ரவீந்திரநாத் ஆகியோர் பிரமாண பத்திரங்களில் தாக்கல் செய்த சொத்து விவரங்களின் உண்மை தன்மை குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த சொத்து முறைகேடு புகார் தொடர்புடைய பத்திரப்பதிவு அலுவலகங்கள், சில நிறுவனங்களிடம் ஓ.பன்னீர்செல்வம், ப.ரவீந்திரநாத் ஆகியோரின் சொத்து விவரங்கள் தொடர்பான தகவல்களை கேட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த ஆவணங்கள் சரிபார்ப்பு, விவரங்கள் சேகரித்தல் போன்ற பணிகளில் போலிசார் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கிற்கு தடை கோரி ஓபிஎஸ், ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் பிப்ரவரி 1ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்