(Source: ECI/ABP News/ABP Majha)
NIA Raid: சிவகங்கையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூபர் வீட்டில் என்ஐஏ ரெய்டு - கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்
வெளிநாட்டிலிருந்து பணம் ஏதும் பெற்றுள்ளாரா என்பன குறித்து விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் இரண்டு இடங்கள், சென்னை, திருச்சி, தென்காசியில் தலா ஓர் இடம் என என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் சண்முகா நகரில் இருக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றது தொடர்பாகவும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோதனை நடத்தி வருவது ஒரு புறம் இருக்க நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கை ஆஜராக என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று காலை சென்னையில் இருக்கும் என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவர் வெளியூரில் இருப்பதால் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஆஜராக இருப்பதாக பதிலளித்துள்ளார். என்.ஐ.ஏ., சோதனையின் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூடியூபர் விஷ்ணு பிரதாப் வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சுமார் 5.00 மணி நேரமாக நீடித்த சோதனை நிறைவடைந்தது. மொபைல் போன் மற்றும் புத்தகங்களை கைப்பற்றி சென்றுள்ளதும் குறிப்பிடதக்கது.