TNPSC Group 4: இன்று அறிவிக்கப்பட்ட குரூப் 4 தேர்வு.. சிறந்த பயிற்றுநர்கள் மூலம் இலவச பயிற்சி.. எப்படி இணைவது?
டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ/மாணவியர்கள் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி, வருகின்ற ஜூன் மாதம் 6ம் தேதி தேர்வு நடைபெறும் எனவும், பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6, 244 பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்வு எழுத விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வருகின்ற 28ம் தேதி, இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பங்களை சரிபார்க்க 04.03.2024 அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
TNPSC குரூப் 4 பதவிகள் என்ன?
அறிவிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (VAO), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், ஜூனியர் அசிஸ்டண்ட், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் கூடுதலாக வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் ஆகிய பணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNSURB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலவச பயிற்சி:
இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 20000-ற்கும் மேற்பட்ட மாணவ/மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ/மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் 4 (TNPSC GROUP IV) தேர்விற்கு 6244 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று (30.01.2024) வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகங்களில் சிறந்த மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ/மாணவியர்கள் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இச்செய்தியினை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் திருமதி. எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.