தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பழனியில் குவிந்த முருக பக்தர்கள். அரோகரா கோசங்களுடன் வழிபாடு..
பழனியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கிரிவீதியில் குவிந்தனர்.
தமிழ் கடவுள் என்று உலகெங்கும் வாழும் தமிழர்களால் வணங்கப்படுபவர் முருகன். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக இருப்பது பழனி தண்டாயுதபாணி திருக்கோவில். தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் முருக பெருமானிற்கு உகந்த நாட்களான சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி, மற்றும் வைகாசி விசாகம், சஷ்டி விரதம், தைப்பூசம், உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
அவ்வாறு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், காவடி எடுத்தும் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள். தைப்பூசம் அன்று விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். அதேபோல் முருகன் கோவிலுக்கு சென்று அபிஷேகங்கள் கண்டால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். முருகப் பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முகக் கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் உள்ளிட்ட பாடல்களை பாடினால் சிறப்பு.
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. கோவிலில் நடைபெறும் திருவிழாக்களின்போது பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து மலைக்கோவில் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு அம்சமாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத்திருவிழா ஏப்ரல் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை காலை பங்குனி உத்திர திருவிழா நடைபெற்ற நிலையில், தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் கடந்த மூன்று நாட்களும் பழனி மலைக்கோவிலுக்கு தரிசனத்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி மலைக் கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு அருள்மிகு தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இன்று தமிழ் புத்தாண்டு மட்டுமின்றி பங்குனி உத்திர திருவிழா நிறைவு நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் சுமந்தபடிபாதயாத்திரையாக பழனிக்கு வந்திருந்தனர்.
இவர்கள் அடிவாரம் கிரிவீதியில் மேளதாளம் முழங்க ஆடிப்பாடி கிரிவலம் வந்து மலையேறினார். மலை கோயிலில் பக்தர்கள் கூட்டம் காரணமாக சாமி தரிசனம் செய்ய சுமார் மூன்று மணி நேரம் ஆனது. மலைக்கோயில் பக்தர்களுக்கு வேண்டிய விரைவு தரிசனம், குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை திருக்கோயில் அதிகாரிகள் அலுவலர்கள் செய்திருந்தனர். இன்று மாலை கொடி இறக்கப்பட்டு பங்குனி உத்திரம் விழா நிறைவு பெறுகிறது.





















