மேலும் அறிய
எங்களை சீண்டி பார்க்காதீர்கள்.. சாது மிரண்டால் காடு கொள்ளாது.. - முருக பக்தர்கள் மாநாட்டில் பவன்கல்யாண் !
முருகனை பற்றி கேள்வி கேட்கும் நீங்கள், அரேபியாவில் இருந்து வந்த மதங்களை பற்றி இதே கேள்வியை நீங்கள் கேட்க முடியமா? - பவன்கல்யாண் பேச்சு.

மேடையில் பவன்கல்யாண் பேச்சு
Source : whats app
கிறிஸ்தவம், முஸ்லிம் மதங்கள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதுபோல இந்து மதத்திற்கும் மரியாதை கொடுங்கள். இதுதான் என் வேண்டுகோள் - மேடையில் பவன்கல்யாண் பேச்சு..
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் சிறப்புரை
மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. மாலை துவங்கிய மாநாட்டில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகள், மடாதிபதிகள், பா.ஜ.க., நிர்வாகிகள், ஆன்மீகம் சார்ந்த நபர்கள் என ஏராளமானோர் பேசினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொண்டு விழாவில் சிறப்புரையாற்றினார்.
மேடையில் முழங்கிய பவன்கல்யாண்
பவன்கல்யாண் மேடையில் பேசுகையில்..,” மதுரைக்கு என்னை வரவழைத்தது முருகன். என்னை வளர்த்தெடுத்தது முருகன். எனக்கு துணிச்சல் தந்தது முருகன். மதுரைக்கும், முருகனுக்கும் நெருக்கம் அதிகம். முருகனின் முதல் படை வீடும், கடைசி அறுபடை வீடும் மதுரையில் தான் உள்ளன. மதுரை என்பது மீனாட்சி அம்மன் பட்டணம். மீனாட்சி அம்மன் தாயார் பார்வதியின் அம்சம். எனவே முருகனின் தாயாரும், மதுரையில் தான் உள்ளார். முருகப்பெருமானின் தந்தையான சிவபெருமான் முதல் தமிழ் சங்கத்துக்கு தலைமை ஏற்று மதுரையில் தான் இருந்தார். தாயும், தந்தையும், மகனும் இந்த மதுரையில் தான் இருக்கிறார்கள். அப்படி என்றால் இந்த மதுரை மக்கள் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த புண்ணியத்தின் பலனாகவே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இங்கு அவதரித்தார். அவர் தென்னகத்தின் மாபெரும் தலைவர் ஆவார். மேலும் அவர் முருகனின் அவதாரமாக கருதப்படுகிறார். முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அருகே மயில் சிலையும் வைக்கப்பட்டு உள்ளது. தேவர் உருவில் முருகன் மனிதனாக வாழ்ந்தார். எனவே முத்து ராமலிங்க தேவரை பணிந்து வணங்குகிறேன்.
எங்களை சீண்டி பார்க்காதீர்கள்
இந்துக்கள் அமைதியானவர்கள், பண்பானவர்கள். ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்வதராக இருக்கலாம். ஒரு முஸ்லிம், முஸ்லிமாக இருக்கலாம். ஆனால், ஒரு இந்து இந்துவாக இருந்தாலே இவர்களுக்கு பிரச்னை. ஒருவன், இந்துவாக இருந்து விட்டால், அவன் மதவாதி என்பது அவர்களின் போலி முகமாக உள்ளது. என் நம்பிக்கையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது. அதனை கேட்க நீங்கள் யார்?. உங்கள் நம்பிக்கையை நாங்கள்கேள்வி கேட்கவில்லை. அதே நாகரீகத்தை நீங்கள் கடைபிடியுங்கள். என் மதத்துக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவமரியாதையை செய்யாதீர்கள். முருகனை பற்றி கேள்வி கேட்கும் நீங்கள், அரேபியாவில் இருந்து வந்த மதங்களை பற்றி இதே கேள்வியை நீங்கள் கேட்க முடியமா?. அதற்கான துணிச்சல் உங்களுக்கு உண்டா?. அதனால், எங்களை சீண்டி பார்க்காதீர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது.
கைமாறு செய்ய வேண்டாமா
நாம் அமைதியானவர்கள், சகித்து கொள்ளக்கூடியவர்கள் என்பதால், இப்படி செய்கிறார்கள். மீனாட்சி அம்மன் கோயில் 60 ஆண்டுகளாக மூடிக்கிடந்தபோது பார்த்து கொண்டு தானே இருந்தோம். அந்த துணிச்சலால் அப்படி பேசுகிறார்கள். பொறுமை என்பது கோழைத்தனம் அல்ல. இங்கு உள்ள முருக பக்தர்கள் அனைவரும், ஒரு பார்வை பார்த்தாலே போதும். நம் கடவுளை திட்டும் கூட்டம், காணாத கூட்டமாகி விடும். இன்று இந்த கூட்டம் வரும், நாளை வேறு ஒரு கூட்டம் வரும். எத்தனை நாள் பொறுப்பது. முருகனை பற்றி இழிவாக சொன்னால், உங்கள் இதயம் நொருங்க வேண்டாமா, பதற வேண்டாமா,. நம்மை காப்பாற்றும் முருகனை நாம் காப்பாற்ற தேவையில்லை. ஆனால், நம்மை காப்பாற்றுவதற்கு கைமாறு செய்ய வேண்டாமா. நன்றியை காட்ட வேண்டாமா, நன்றியை சொல்ல வேண்டாமா,. இந்த மாநாட்டின் மூலம் ஒரு முடிவுக்கு வருவோம். எப்படி மின்னல் கண்களை குருடாக்குமோ, காட்டாற்று வெள்ளம் கரைகளை உடைக்குமோ அதுபோல், பொங்குவோம்.
நாச சக்திகளை வதம் செய்வோம்
அநீதியை தட்டிக்கேட்க திரளுவோம், அறத்தை காக்க அனைவரும் எழுவோம், முருகனை காப்பாற்ற புறப்படுவோம் என அறக்கூவல் விடுக்கிறேன். இப்படி தோற்கின் எப்படை வெல்லும்.. அன்பு என்பது பலவீனம் அல்ல. அது துணிவின் அடையாளம். வீரத்தின் அடையாளம் வெற்றியின் படிக்கட்டு. அன்பால் இணைவோம், ஆவேசத்தால் வெல்வோம். இதுகலியுகம் முருகபெருமாள் நேரில் வர மாட்டார். நாமே முருகனின் உருவமாக மாறுவோம். நாச சக்திகளை வதம் செய்வோம். இந்திய அரசமைப்பு சட்டம் இருக்கும்போதே ஒரு கூட்டம் நமக்கு எதிராக செயல்படுகிறது. காரணம், நாச சக்திகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாமல் விட்டது நம் தப்பு தான்.
இந்து மதத்திற்கும் மரியாதை கொடுங்கள். இதுதான் என் வேண்டுகோள் என்றார்
இந்து கடவுளை மட்டுமே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். நாத்தீக கூட்டத்திற்கு, அரசியலமைப்பு சட்டம் கொடுத்த ஆயுதம் பேச்சுரிமை. இதனால், அவர்கள் இஸ்டத்துக்கு பேசுகிறார்கள். நமது கடவுளை திட்டுவது வழக்கமாகி விட்டது. அவர்கள் நம் கடவுளை திட்டினாலும் நாம் கோபப்படக்கூடாது, காரணம் அது அவர்களின் பேச்சுரிமை. அவர்கள் திட்டி கொண்டே இருந்தாலும் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் இந்துக்கள். இந்த மனநிலை மாற வேண்டும். இந்துக்களிடம் மாற்றம் வரவேண்டும். கிறிஸ்தவம், முஸ்லிம் மதங்கள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதுபோல இந்து மதத்திற்கும் மரியாதை கொடுங்கள். இதுதான் என் வேண்டுகோள்” எனவும் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















