Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Parasakthi Audio Launch Sivakarthikeyan Speech: ஜனவரி 9ம் தேதி விஜயின் ஜனநாயகன் படத்தை கொண்டாடுங்கள் என, பராசக்தி ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

Parasakthi Audio Launch Sivakarthikeyan Speech: யாரு என்ன சொன்னாலும் 2026 பொங்கல் அண்ணன் தம்பி பொங்கல் தான் என, பராசக்தி ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.
ஜனநாயகன் Vs பராசக்தி:
தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜயின் கடைசி படமாக, ஜனநாயகன் உருவாகியுள்ளது. ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் வெளியாக உள்ளது. இதனிடையே, அடுத்த நாளே சிவாகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படமும் வெளியாக உள்ளது. இதனால் இருதரப்பு ரசிகர்கள் இடையேயும் சமூக வலைதளங்களில் வார்த்தை போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் இசைவெளியீட்டு விழாவை ஒளிபரப்புவது, அடுத்த நாளே படத்தை வெளியிடுவது என உள்நோக்கத்துடன் பராசக்தி குழு செயல்பட்டு வருவதாகவும், இதில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் பல விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
பராசக்தி ஆடியோ லாஞ்ச்:
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் ஜெயம்ரவி, அதர்வா, ஸ்ரீலீலா என பெரும் நட்சத்திர பட்டாளமே உள்ளது. இந்நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் ஜனநாயகன் படத்துடனான போட்டி குறித்து சிவகார்த்திகேயன் என்ன பேச உள்ளார் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது. அதன்படி இந்த விவகாரம் குறித்து, சிவகார்த்திகேயனும் விரிவாக பேசி விளக்கம் அளித்துள்ளார்.
ஜனநாயகன் Vs பராசக்தி வந்தது எப்படி? - சிவகார்த்திகேயன்
நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், "ஆரம்பத்தில் பராசக்தி படத்தை தீபாவளிக்குத்தான் வெளியிடுவதாக திட்டமிட்டு இருந்தோம். பின்பு விஜய் அண்ணாவின் படம் அக்டோபர் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்ததும், பராசக்தியை பொங்கலுக்கு வெளியிடலாம் என தயாரிப்பாளரிடம் பேசி அதற்கேற்ப திட்டமிட்டோம். ஆனால், திடீரென ஜனநாயகன் படமும் பொங்கலுக்கு வருவதாக சொன்னதும் நான் உடனே அதிர்ச்சி அடைந்துவிட்டேன். நான் உடனே தயாரிப்பாளர் ஆகாஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஜன நாயகன் படமும் பொங்கலுக்கு வருதாமே, நாம் எந்த தேதிக்கு பராசக்தி வெளியீட்டை தள்ளிவைக்கலாம் என கேட்டேன்.
மனதில் உறுத்தல் - சிவகார்த்திகேயன்
அப்போது, பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என முதலீட்டாளர்களுக்கு வாக்குறுதி அளித்துவிட்டோம். இதற்கு மேலும் படத்தை தாமதப்படுத்தினால் பின்பு கோடைகாலத்தில் தான் வெளியிட முடியும். அப்போது தேர்தல் வேறு வருகிறது என தயாரிப்பாளர் சொன்னார். அதனால், நானும் பொங்கல் வெளியீட்டிற்கு சம்மதம் தெரிவித்தேன். ஆனால், ஏதோ ஒன்று மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. உடனடியாக விஜய் சாரின் மேனேஜர் ஜெகதீஷை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டேன். ஜனநாயகன் மற்றும் பராசக்தி பொங்கலுக்கு வருகிறதே என கேட்டேன். இரண்டு படங்கள் தானே, பொங்கலுக்கு அதெல்லாம் தாராளமாக வரலாம் என்று சொன்னார்.
”ஜனநாயகன் படத்தை கொண்டாடுங்க”
உங்களுக்கு பிரச்னை இல்லை. எனக்குத்தான். நீங்கள் ஒருமுறை விஜய் சாரிடம் பேசுங்களேன் என கேட்டேன். அதன்படி விஜய் சாரிடம் பேசிவிட்டு என்னை தொடர்புகொண்ட ஜெகதீஷ், ”அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. சூப்பரா பொங்கலுக்கு வரட்டும். எஸ்கேவுக்கு என் வாழ்த்துகளை சொல்லிடுங்க: என விஜய் சார் சொன்னார் என்று கூறினார். மக்களே.. 33 வருடங்கள் நம் அனைவரையும் அவர் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார். எனவே ஜனவரி 9ம் தேதி ஜன நாயகனை கொண்டாடுங்க.. ஜனவரி 10 பராசக்தியை கொண்டாடுங்க.. யாரு என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் இந்த பொங்கல் அண்ணன் தம்பி பொங்கல்” என சிவகார்த்திகேயன் பேசியுள்லார். இதைகேட்டதும் ஒட்டுமொத்த அரங்கமும் ஆர்பரித்துள்ளது.
ஜனநாயகன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி இன்று மாலை ஜி தமிழ் தொலைக்காட்சியிலும், பராசக்தி படத்தின் ஆடியோ லாஞ்ச் இன்று மாலையே சன் டிவியிலும் ஒளிபரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.





















