Jana Nayagan: ஜனநாயகன் பார்க்கும் முன்.. பகவந்த் கேசரி படத்தை மிஸ் பண்ணாம பாருங்க.. எந்த ஓடிடி தெரியுமா?
வழக்கமாக தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் படங்கள் கடுமையாக ட்ரோல் செய்யப்படும் நிலையில் பகவந்த் கேசரி அதன் கதைக்காக பாராட்டைப் பெற்றிருந்தது. இதனை 2 ஓடிடி தளங்களில் தமிழ் டப்பிங்கில் நாம் பார்க்க முடியும்.

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தைப் பார்க்கும் முன் எல்லோரும் தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த பகவந்த கேசரி படத்தை பார்க்க வேண்டும் என விஜய் ரசிகர்களுக்கு இணையவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களில் #BhagavanthKesari என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.
ஜனநாயகன் பொங்கல்
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் “ஜனநாயகன்”. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, நாசர், மதன் கௌரி என ஏகப்பட்ட பேர் இப்படத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஜய்யின் 69வது படமாக உருவாகி இருக்கும் ஜனநாயகன் அவரின் சினிமா கேரியரில் கடைசிப் படமாகும். இதனைத் தொடர்ந்து அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் இப்படம் ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் கடந்த டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விஜய்க்கு சிறப்பான ஃபேர்வெல் பார்ட்டி கொடுக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் ஜனநாயகன் தான் தன்னுடைய கடைசிப் படம் என்பதை விஜய் உறுதிப்படுத்தினார்.
ட்ரெய்லரில் கிண்டப்பட்ட கேசரி
இந்த நிலையில் ஜனநாயகன் படம் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி எடுக்கப்படுவதாக ஆரம்பத்தில் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த பகவந்த கேசரி படத்தின் சில காட்சிகளை அதிகாரப்பூர்வமாக பெற்று இப்படத்தில் இடம்பெற செய்துள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் ஜனவரி 3ம் தேதி மாலை ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
இதில் ஒவ்வொரு சீனும் பகவந்த் கேசரி படத்தின் காட்சிகளை ஒட்டி இருந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். எனினும் கேசரியோ, பொங்கலோ விஜய் எதை படமாக கொடுத்தாலும் அதைப் பார்த்து கொண்டாடி தீர்ப்போம் என முடிவெடுத்துள்ளனர்.
பகவந்த் கேசரி படம்
கடந்த 2023ம் ஆண்டு பகவந்த் கேசரி படம் வெளியானது. இப்படத்தில் பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஸ்ரீலீலா, அர்ஜூன் ராம்பால் ஆகியோர் நடிக்க அனில் ரவிபுடி இயக்கியிருந்தார். தமன் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். வழக்கமாக தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் படங்கள் கடுமையாக ட்ரோல் செய்யப்படும் நிலையில் பகவந்த் கேசரி அதன் கதைக்காக பாராட்டைப் பெற்றிருந்தது. இப்படியான நிலையில் பகவந்த் கேசரி படம் தமிழ் டப்பிங்கில் அமேசான் பிரைம் மற்றும் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காண கிடைக்கிறது. சமூக வலைத்தளத்திலும் இதுதொடர்பான ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.





















