முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த கோரி 152 பொங்கல் வைத்த பொதுமக்கள்
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 152 பொங்கல் வைத்து கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், தேனி மாவட்டத்தில் குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து பழனிசெட்டிபட்டி வடையில் வருடந்தோறும் செய்யப்படும் இரண்டு போக நெல் விவசாயத்தின் உயிர்நாடியாக இருந்து வரும் முல்லைப் பெரியாறு அணையில், 142 அடியிலிருந்து 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முல்லைப் பெரியாறு அணையில் நான்காவது முறையாக 142 அடி நீர் மட்டம் வரை நீர் தேக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு 136 அடி வரை மட்டுமே நீர் தேக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடிய நிலையில் முல்லை பெரியாறு அணையில் 136 அடியிலிருந்து 142 அடி வரைக்கும் நீர்மட்டத்தை உயர்த்தி கொள்ளலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையில் இதுவரை நான்கு முறை 142 அடி வரையில் நீர்மட்டத்தை உயர்த்திய நிலையில், கேரள அரசு தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் பல்வேறு முரண்பாடுகளை தற்போது வரை கடைபிடித்து வருகிறது.
கேரளாவைச் சேர்ந்தவர்களும் முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக உள்ளது அதனை இடிக்க வேண்டும் என பல்வேறு பொய் பிரச்சாரங்களை நடத்தி வருகின்ற செயல்களும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டபோது தமிழகத்திலிருந்து இடுக்கி மாவட்டம் பிரிந்த நிலையில் இடுக்கி மாவட்டத்திலுள்ள தேவிகுளம், பீர்மேடு, உடுமலை தாலுகாக்களை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தியும்
மேலும் 1296 கோடி ரூபாய் செலவில் லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு ராட்சத குழாய்கள் மூலம் நேரடியாக நீரை கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட்டு மாற்று திட்டத்தின் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி முல்லைப் பெரியாறு பாசனம் மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கூடலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு ஊர்பொது மக்களுடன் 152 அடி நீர் மட்டத்தை உயர்த்தவேண்டுமென கூறி 152 பொங்கல் வைத்து தமிழக அரசையும் ,கேரள அரசையும் கவரும் விதமாக கவனஈர்ப்பு போராட்டத்தை நடத்தினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்