முல்லைப் பெரியாறு அணை: புதிய ஆய்வில் அதிகாரிகள்! நீர்மட்டம், பாதுகாப்பு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகுமா?
முல்லைப் பெரியாறு அணை கமிட்டி அலுவலகத்தில் இரு மாநில அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தி ஆய்வு அறிக்கையை மத்திய கண்காணிப்பு குழுவினருக்கு சமர்ப்பிக்க உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். தமிழக, கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய நீர் பாசனமாகவும் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த முல்லைப் பெரியாறு அணை கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் ஏற்கனவே இருந்த மத்திய கண்காணிப்பு குழு துணை கண்காணிப்பு குழு ஆகிய இரண்டும் கலைக்கப்பட்டு புதிதாக தேசிய அணைகள் பாதுகாப்பு தலைவர் அணில் ஜெயின் தலைமையிலான ஏழு பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளனர்.
இந்த குழுவினர் அணையை ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். இந்த குழுவினற்கு துணையாக அணை பாதுகாப்பு ஆணைய மண்டல இயக்குனர் கிரிதர் தலைமையில் புதிய துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த துணை கண்காணிப்பு குழு மாதந்தோறும் அணையில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு பராமரிப்பு பணிகள் செய்வது குறித்து மத்திய கண்காணிப்பு குழுவிற்கு அறிக்கையை அனுப்பி வைப்பார்கள். அதன் அடிப்படையில் அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தக்குழு முதல் முறையாக 2025 ஜூன் மாதம் மூன்றாம் தேதி அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் மூன்று மாதத்திற்கு பின் இரண்டாவது முறையாக இன்று அணையின் நீர்மட்டம் 133.80 அடியாகவும் அணைக்கு நீர்வரத்து 1156 கன அடியாகவும் அணையில் மொத்த நீர் இருப்பு 5586.20 மில்லியன் கன அடியாகவும் உள்ள நிலையில் அணைப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.
துணைக் கண்காணிப்பு குழுவின் தலைவர் கிரிதரண் தலைமையில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், செயற்பொறியாளர் செல்வம், கேரளா அரசு சார்பில் செயற்பொறியாளர் லெவின்ஸ் பாபு உதவி செயற்பொறியாளர் சிஜி ஆகியோர் உட்பட இரு மாநில அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் பேபி அணை, மெயின், மதகுப்பகுதி, நீர்க்கசிவு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்கின்றனர். இந்த ஆய்விற்கு பிறகு மாலை முல்லைப் பெரியாறு அணை கமிட்டி அலுவலகத்தில் இரு மாநில அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தி ஆய்வு அறிக்கையை மத்திய கண்காணிப்பு குழுவினருக்கு சமர்ப்பிக்க உள்ளனர்.





















