இறந்ததாக அறிவித்த போலீஸ்: உயிரோடு வந்ததால் பிரிந்த குடும்பத்தில் சேர்ந்த பழங்குடி!
போலீசார் செய்த இந்த தவறால், நடந்த ஒரே ஒரு ஆறுதல், 10 ஆண்டுகளுக்குப் பின் பிரிந்த மனைவி மற்றும் குழந்தைகளின் அன்பை பெற்றார் சின்னக்கண்ணு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லுப்பட்டியில் வசிப்பவர் பழங்குடிகள் இனத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணு( 46). மனைவியை பிரிந்து வாழம் இவர், கடந்த 10 மாதத்திற்கு முன்பு கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் பிழைப்பு தேடி உறவினர்களிடமும் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார். தொடர்பு எதுவும் இல்லாததால் உறவினர்கள் சின்னகண்ணுவை காணவில்லை என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இந்நிலையில் புலிகுத்திகிராமம் அருகே விவசாய கல்லூரி தோப்பிற்குள் ஒருவர் இறந்து கிடப்பதாக கல்லல் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற கல்லல் காவல்துறையினர் அருகில் இருப்பவர்களிடம் விசாரணை செய்ததில் இறந்து கிடப்பது கல்லுப்பட்டி மாதா கோவில் அருகே வசிக்கும் காணாமல் போன சின்னகண்ணு என கூற, உறவினர்களை அழைத்துவந்த காவல்துறையினர், இறந்து கிடந்தவரை காண்பித்தனர்.
இவர் சின்னகண்ணு தானே என்று கூற, உறவினர்கள் மறுத்துள்ளனர். இருந்தாலும் கிராமத்தினர் சிலரை காவல்துறையினர் மிரட்டி இறந்து கிடப்பது சின்னகண்ணு தான் என எழுதிவாங்கி உடலை பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்களும் சின்னக்கண்ணு இறப்பு குறித்து சக உறவினர்களுக்கு தெரிவித்தனர். 10 வருடமாக பிரிந்திருந்த மனைவி வளர்மதி மற்றும் குழந்தைகளும் கணவர் இறந்த செய்தி கேட்டு கல்லுப்பட்டி வந்து சேர்ந்தனர். கிராமமே ஒரே ஓலம், ஒப்பாரி. ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து துக்கம் விசாரித்துக் கொண்டனர். இருக்கும் போது அவரை பாடாய் படுத்தியவர்கள் கூட, அவர் அப்படி செய்தார், இப்படி செய்தார் என சின்னகன்னு புகழ் பாடினர். வாழம் போது தான் சரிவர கவனிக்க முடியவில்லை, இறுதிச்சடங்கையாவது ஒன்று கூடி செய்வோம் என முடிவு செய்த உறவினர்கள், நேற்று காலை சின்னக்கண்ணு உடலை வாங்க சிவகங்கை செல்ல தயாராகினர்.
இந்நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர் ஒருவர், சின்னக்கண்ணு தேவகோட்டையில் உயிரோடு இருப்பதாக கூற, அழுது கதறிக் கொண்டிருந்த உறவினர்கள் அனைவரும், அப்படியே ப்ரீஸ் ஆகினர். உடனே தேவகோட்டைக்கு புறப்பட்டுச் சென்ற அவர்கள், உயிரோடு இருந்த சின்னக்கண்ணுவை கட்டி அணைத்து கதறினர். கிராமமே சின்னக்கண்ணு இறந்து விட்டதாக நம்பியிருந்ததால், அவரை லோடு வாகனத்தில் ஏற்றி, ஊர்வலமாக அழைத்து வந்து ஊர் முழுக்கச் சுற்றி, சின்னக்கண்ணு உயிரோடு தான் இருக்கிறார் என நெகிழ்ச்சியோடு அறிவித்தனர்.
வழக்கை முடிப்பதற்காக அடையாளம் தெரியாத நபரை, மாயமான நபராக ஒப்புக்கொள்ள வைத்த போலீசாரின் அடிப்படை தவறு தான் இந்த குழப்பம் அனைத்திற்கு காரணம். இந்த சம்பவத்தில் ஆறுதலான விசயம் ஒன்றே ஒன்று தான்... அதுவரை யாரும் மதிக்காத சின்னக்கன்னு, தற்போது மதிக்கப்படுகிறார், கவனிக்கப்படுகிறார், பாசத்தை பெறுகிறார். பல ஆண்டுகளாக பிரிந்திருந்த மனைவி, குழந்தைகளின் அன்னை பெறுகிறார்.