மேலும் அறிய
மதுரை மக்களே தீரும் தலைவலி... வேகமெடுக்கும் முக்கிய பாலம் - எங்கு தெரியுமா..?
மதுரை மையமாக கருதப்படும் கோரிப்பாளையம் பகுதியில் பாலம் வேலை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோரிப்பாளையம் மேம்பால பணிக்காக நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோரிப்பாளையம்
Source : whats app
மதுரை கோரிப்பாளையம் அருகில் புதிய மேம்பால துாண்கள் அமைக்கும் பணிகளுக்காக நாளை முதல் தேனி ஆனந்தம் முதல் குமரன் சாலை சந்திப்பு வரையிலான ரோடு அடைக்கப்படுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோரிப்பாளையத்தில் புதிய பாலம்
மதுரை மாநகருக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் என சுற்றியுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மதுரையில் பல்வேறு தேவைகளுக்காக வருவதுண்டு. இதனால் மதுரையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த சூழலில் மதுரையின் மையப்பகுதியாக இருக்கும் கோரிப்பாளையம் பகுதியில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. தமுக்கம் மைதானத்தில் இருந்து துவங்கி கோரிப்பாளையம் மற்றும் வைகை ஆற்றை கடந்து வடகரையில் தென்கரைக்கு புதிய பாலம் போடப்படுகிறது. இதனால் அரசு ராஜாஜி மருத்துவமனை, மீனாட்சி அரசு பெண்கள் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி என பல்வேறு தேவைக்காக இப்பகுதி வரும் மக்கள் கூட்டநெரிசல் இல்லாமல் கடந்து செல்ல இந்த பாலம் பயன்பெற உள்ளது. இந்நிலையில் கோரிப்பாளையம் மேம்பால பணிக்காக நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டும் என போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
கோரிப்பாளையம் பகுதியில் வாகன போக்குவரத்து மாற்றம்
குமரன் ரோடு வைகை வடகரை சந்திப்பு முதல் ஆழ்வார்புரம் இறக்கம் வரை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
தத்தனேரி மெயின் ரோட்டிலிருந்து விரகனுார் ரோடுக்கு செல்லும் கனரக, சரக்கு வாகனங்கள் பாத்திமா கல்லூரியிலிருந்து இடதுபுறம், கூடல்புதுார் பாலம், ஆனையூர், அய்யர்பங்களா, மூன்று மாவடி, 120 அடி ரோடு வழியாக செல்ல வேண்டும்.
குருவிக்காரன் சாலையிலிருந்து வைகை வடகரை, தத்தனேரி மெயின் ரோடு வழியாக திண்டுக்கல் ரோட்டிற்கு செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் அனைத்தும் வைகை தென்கரை ரோடு வழியாக எம். ஜி.ஆர்., பாலத்தில் வலதுபுறம் திரும்பி வைகை வடகரை ரோடு வழியாக செல்ல முடியும்.
ஆரப்பாளையம் பேருந்துநிலையத்திலிருந்து வைகை வடகரை வழியாக மாட்டுத்தாவணி செல்லக்கூடிய சிட்டி பஸ்கள், புறநகர் பஸ்கள் அனைத்தும் தத்தனேரி மேம்பாலம், கபடி ரவுண்டானா பாலம் ஸ்டேஷன் ரோடு வழியாக செல்ல வேண்டும்.
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், அழகர் கோயில் ரோட்டிலிருந்து தமுக்கம் வழியாக ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், பாத்திமா கல்லூரி சந்திப்பு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் கே.கே.நகர் ஆர்ச், பெரியார் சிலை சந்திப்பு, தமுக்கம், கோரிப்பாளையம், ஏ.வி., பாலம் வழியாக அண்ணா சிலை சென்று செல்லவேண்டும்.
அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் செல்லக்கூடிய பஸ்கள் பனகல் ரோடு சிவ சண்முகம்பிள்ளை தெரு வைகை வட கரை வழியாக ஓபுளா படித்துறை சென்று பாலம் வைகை - தென்கரை வழியாக செல்லவேண்டும்.
ஆவின் சந்திப்பு வழியாக ஆரப்பாளையம் செல்லக்கூடிய பஸ்கள் குருவிக்காரன் சாலை ரவுண் டானா, காமராஜர் ரோடு, முனிச்சாலை வழியாக செல்ல வேண்டும்.
அழகர்கோயில் ரோட்டிலிருந்து செல் லக்கூடிய பொது மக்களின் இலகுரக, இருசக்கர வாகனங் கள் ஆழ்வார்புரம் இறக்கம் வைகை வடகரை, ஓபுளா பாலம், மீனாட்சி கல்லுாரி ரோடு, ஏ.வி., பாலம் வழிகளை பயன்படுத்தி நகரின் எந்த பகுதிக்கும் செல்லலாம்.
யானைக்கல் சந்திப்பிலிருந்து வைகை தென்கரை ரோட்டிலிருந்து செல்லும் வழி தற்காலிகமாக அடைக்கப்படுகிறது. இவ்வழியாக செல்லும் வாகனங்கள் சிம்மக்கல் பஸ் ஸ்டாப் இடதுப் புறம் திரும்பி திருமலைராயர் படித்துறை ரோடு வழி செல்லலாம்.
இந்த பாலத்தின் பணிகள் ஏற்கனவே தீவிரமாக நடைபெற்றுவரும் சூழலில் தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த பாலம் பணி நிறைவடைந்தால் மதுரை போக்குவரத்துப் பிரச்னை குறையும் என சொல்லப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
உலகம்
பொழுதுபோக்கு





















