Madurai: அழகர் கோயில் ஆடித் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் ; ஆகஸ்ட் 1ஆம் தேதி தேரோட்டம்
அழகர்கோயில் ஆடித் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம். ஆகஸ்ட் 1ஆம் தேதி தேரோட்டமும், அன்று மாலை பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கதவுகள் திறக்கப்பட்டு சந்தனகாப்பு பூஜையும் நடைபெற உள்ளது.
வரும் 03ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில், ஜூலை 28ஆம் தேதி கள்ளழகர் தங்க்கபல்லக்கில் புறப்பாடாகி திருக்கோவிலில் உள்ள சிவகங்கை சமஸ்தான மறவர் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 31ஆம் தேதி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 01ஆம் தேதி காலை 08.00 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இலட்சகணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளனர். இதனைத்தொடர்ந்து அன்று மாலை ஆடிப் பௌர்ணமியையொட்டி, வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நிகழும். அழகர்கோயில் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் திருக்கதவுகள் திறக்கப்பட்டு, 18படிகளுக்கும் சிறப்பு பூஜையும், அதனைத்தொடர்ந்து திருக்கதவுகளுக்கு சந்தனகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இத்திருவிழாவையொட்டி, திருக்கோவில் சார்பில் பல்வேறு ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் ராமசாமி தலைமையில், கண்காணிப்பாளர் பிரதீபா மற்றும் சேகர் மேற்பார்வையில் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்