மதுரை - நத்தம் பாலத்தில் அதிகளவு நடைபெற்ற குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை - நத்தம் பறக்கும் பாலம்
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் மதுரை தல்லாகுளம் பகுதியில் இருந்து நத்தம் வரை 35 கிலோமீட்டருக்கு 1,028 கோடி ரூபாயில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி பணி நிறைவு செய்யப்பட்டது. இதற்காக மதுரை பாண்டியன் ஓட்டலில் இருந்து ஊமச்சிகுளம் இடையேயான 7.3 கிமீ தூரத்திற்கு பறக்கும் மேம்பாலம் அமைக்கப்பட்டது. பறக்கும் பாலப்பணி 2018 நவம்பரில் துவங்கிய நிலையில், 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய இப்பணி கொரானா காரணமாக 5 ஆண்டுகளாக நடைபெற்றது. இதையடுத்து 2023- ஏப்ரல் மாதத்தில் பாலம் திறக்கப்பட்டது. மொத்தம் பறக்கும் பாலத்திற்காக 192 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாலத்தை பயன்படுத்து நபர்களை விட பாலத்திற்கு கீழ் உள்ள சாலையை பயன்படுத்தும் நபர்கள் தான் அதிகமாக இருக்கின்றனர். குறைந்த அளவு பாலத்தை பயன்படுத்தினாலும் விபத்து குறையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவரும் சூழலில் தற்போது ஒரு விபத்து நடைபெற்றுள்ளது.
நத்தம் பாலத்தில் நடந்த விபத்து
சென்னையை சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பத்தினர் மதுரைக்கு வருகை தந்துள்ளனர். பின்னர் அழகர்கோயில் செல்வதற்காக தத்தனேரி பகுதியில் உள்ள வாடகை கார் நிறுவனம் மூலமாக கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். இந்த வாடகை காரை மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்ற ஓட்டுனர் ஓட்டிசென்றுள்ளார். பின்னர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மதுரை நோக்கி காரில் திரும்பியுள்ளனர். அப்போது மதுரை நத்தம் பறக்கும் பாலத்தின் மீது கார் வேகமாக வந்து கொண்டிருந்தபோது பாலத்தில் நடுவே செங்கல் ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று பழுதாகி நின்றுள்ளது. அதனை கவனிக்காமல் லாரி மீது கார் வேகமாக மோதியதில் கார் முழுவதுமாக நொறுங்கியது. இந்த விபத்தில் கார் ஓட்டுநரான மதியழகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை - நத்தம் பாலத்தில் நடைபெற்ற விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரிக்கும் விபத்து
தமிழ்நாட்டின் மிக நீளமான பறக்கும் பாலம் என போற்றப்பட்ட இந்த பாலத்தில் பல இடங்களில் முறையான திட்டமிடல் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளதால் விபத்துக்கள் ஏற்படுவதாக புகார்கள் வாசிக்கப்படுகிறது. மதுரை - நத்தம் பாலம் தொடர்பான வெளியான தகவலில்.., பாலம் திறக்கப்பட்ட கடந்த ஜனவரி 2023 முதல் 2025 ஜனவரி மாதம் வரை சுமார் 25 மாதங்களில் பாலத்தின் மேல்பகுதி மற்றும் கீழ் பகுதியில் 86 விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், இந்த விபத்துகளில் சுமார் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 67 பேர் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் வழிப்பறி சம்பவமும் அரங்கேறி உள்ளது தெரியவந்துள்ளது.
மழை - வெயிலுக்கு பாலம்?
மதுரை - நத்தம் பாலத்திற்கு கீழே இருக்கும் சாலையில் தான் அதிகளவு பயணிக்கின்றனர். பாலத்தில் அதிகளவு வெயில் மற்றும் மழையை தவிர்க்க பலரும் கீழே தான் சென்று வருகின்றனர். இதனால் குறைவான ஆட்கள் தான் பாலத்தின் மேல் செல்கின்றனர். இப்படி இருந்த சூழலிலும் பாலத்தின் மேலே தான் அதிகளவு விபத்து நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள எழுகிறது.