Madurai High Court: ஆவியூர் கிராமத்தில் தீண்டாமை கொடுமை - விருதுநகர் ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
ஆவியூர் கிராமத்தில் உள்ள தேனீர் கடைகள், உணவகங்கள் மற்றும் முடி திருத்த கடைகளில் பட்டியல் சமூகத்திற்கு அனுமதிக்காமல் தீண்டாமையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- மனுதாரர் மனுவில் கோரிக்கை.
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கிராமத்தில் உள்ள செல்லாயி அம்மன், அய்யனார் கோவில் திருவிழாக்களில் பட்டியலின சமூகத்தினர் வழிபாடு நடத்த அனுமதி வழங்கக்கோரிய வழக்கில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் விருதுநகர் காவல் துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆவியூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதே போல் ஆவியூர் தெற்கு தெருவில் 300க்கும் மேற்பட்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்களும் வசித்து வருகின்றனர். ஆவியூர் கிராமத்தில் அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவான செல்லாயி அம்மன் கோயில், ஈஸ்வரன் கோயில் மற்றும் அய்யனார் கோயில்கள் உள்ளன. ஆனால் இந்த கோயிலுக்குள் செல்வதற்கும் திருவிழாக்களின் போது முளைப்பாரி எடுத்தல், வேல் குத்துதல் வரி வசூல் செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
மேலும் எங்கள் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய டீ கடைகளில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் உணவகத்தில் அமர்ந்து உணவு உட்கொள்வதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. முடி திருத்தம் செய்வதற்கும் அனுமதிக்கப்படாமல் தீண்டாமை செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி வழங்க வேண்டும். அதேபோல் அந்த பகுதி தீண்டாமை செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் விருதுநகர் காவல் துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்