அரசு கொடுத்த உறுதி.. அரசு வேலைக்காக 12 ஆண்டுகள் காத்திருப்பு.. மாற்றுத்திறனாளி வீராங்கனையின் கதை..
முன்னாள் தமிழக முதல்வர் தனக்கு அவரது தந்தை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் வாழ்வில் விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு மாற்றுத்திறனாளி வீராங்கனை தீபா இருந்து வருகிறார்.
மதுரை எல்லிஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வீராங்கனை தீபா. இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பேட்மிட்டன், தடகளம் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தமிழகத்திற்கு இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டில் உலக பேட்மிட்டன் போட்டியில் இரண்டு வெள்ளி பதக்கமும், பெல்ஜியத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 3 பதக்கங்களும், 2006ல் நடைபெற்ற 9வது ஆசியா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று இருந்தார்.
அதன் அடிப்படையில் கடந்த 2010 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால் வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சியில் மறைந்த முதல்வர் கருணாநிதியிடம் தனக்கு ஒரு அரசு வேலை வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதற்கு மறைந்த முதல்வர் கருணாநிதி கண்டிப்பாக உங்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து தேர்தல் நடைபெற்றதால் அதிமுகவின் ஆட்சி அமைந்தது வேலை கேட்டு தீபா பலமுறை மாவட்ட ஆட்சியர் அரசு அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். மேலும், அமைச்சரிடம் கொடுத்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
ஆனால் அதிமுக ஆட்சிக் காலத்தின்போது விளையாட்டு போட்டியில் சாதித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மனுக்களை உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கீதா ஜீவனிடம் கொடுத்துள்ளார். குறிப்பாக மதுரையில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்க வந்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடமும் மனுவை கொடுத்துள்ளார். ஆனால் அதற்கான பதில் இன்றுவரை அவருக்கு கிடைக்கவில்லை. மேலும், தீபாவின் கணவரும் இரு குழந்தைகளும் விளையாட்டு வீரர்களாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதலமைச்சர் தனக்கு அவரது தந்தை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் வாழ்வில் விடியல் பிறக்கும் என்ற மாற்றுத்திறனாளி வீராங்கனை தீபா நம்பிக்கையோடு இருந்து வருகிறார். இவருடன் இணைந்து பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற சங்கீதா என்ற மாற்றுத்திறனாளி வீராங்கனையும் மனு கொடுத்து பயனளிக்காதால் நேற்று இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களுடைய பதக்கங்களை ஒப்படைக்க வந்தனர். அவர்களை சமாதானப்படுத்திய மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் விரைவில் இது குறித்து முதலமைச்சரிடம் பேசி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.