ABP Nadu Exclusive: மீனாட்சி அம்மன் திருக்கல்யாண டிக்கெட் வினியோகத்தில் முறைகேடு? ஆன்லைன் மோசடி அம்பலம்!
Chithirai Thiruvizha 2022: ‛‛நான் எனது விபரங்களை கொடுத்து முன்பதிவு செய்கிறேன். எனது தகவலை வைத்து, இன்னொருவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி நியாயமான நடவடிக்கையாக இருக்கும்?’’
தமிழர்களின் பாரம்பரியத்தோடு கலந்த மதுரை சித்திரை திருவிழா(Chithirai Thiruvizha), கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. மதுரையின் அடையாளமாக திகழும் சித்திரை திருவிழா நடைபெறாமல், மதுரைவாசிகள் கவலையில் இருந்தனர். இந்நிலையில் கொரோனா கட்டுப்பாட்டில் வந்ததால், இந்த ஆண்டு வழக்கமான சித்திரை திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி, விழா தொடங்கியுள்ளது. தினமும் வீதி உலா கோலாகலமாக நடந்து வரும் நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், திருத்தேரோட்டம், கள்ளழகர் புறப்பாடு, கள்ளழகர் வைகையில் எழுந்தருளல் போன்ற நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ உள்ளன.
மீனாட்சி அம்மன்-சொக்கநாதர் திருக்கல்யாணத்தை (Meenakshi Amman Thirukalyanam) காண, எப்போதுமே போட்டா போட்டி இருக்கும். அந்த வகையில் அதில் பங்கேற்பவர்களுக்கு கட்டண முறையில் முன்பதிவு செய்ய அறிவிக்கப்பட்டு, அதற்கான இணைய வசதியும் அறிவிக்கப்பட்டது. நபர் ஒருவருக்கு ரூ.500 வீதம் அதற்காக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர், சம்மந்தப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் இணையதளத்தில் அதற்காக முன்பதிவு செய்த நிலையில், அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அவர்கள் கேட்கும் தகவல்களை பதிவு செய்த பின்பாக, அவர்களின் பதிவு உறுதி செய்யப்பட்டு, அதற்கான உறுதிசெய்யப்பட்ட பதிவு செய்பவர் தரும் மெயிலுக்கு வருகிறது. அதில் தெளிவாக, ‛உங்கள் புக்கிங் உறுதிசெய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அடுத்து வந்த இன்னொரு தகவல் தான், முன்பதிவு செய்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவரை பணம் செலுத்தாத நிலையில், அதற்கான பரிசீலனையில், முன்பதிவு செய்தவர் பணம் செலுத்தியதாக அவர்களுக்கு தகவல் வருகிறது. ‛பணமே செலுத்தாத நிலையில், எப்படி பணம் செலுத்தியதாக தகவல் வருகிறது,’ என்று, கோயில் நிர்வாகத்திடம் சிலர் விசாரித்துள்ளனர். அதற்கு அவர்கள், ‛உங்கள் டிக்கெட் புக் ஆகிவிட்டது... அதற்கான பணமும் செலுத்தப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளனர். ‛நான் பணமே செலுத்தவில்லை... எப்படி டிக்கெட் புக்காகும்... அப்படி புக் ஆனால் அந்த டிக்கெட் விபரம் எனக்கு தானே வர வேண்டும்; அது வரவில்லையே...’ என்று கேட்ட போது, ‛கம்யூட்டர் பிரச்சனையாக இருக்கலாம்...’ என்று கூறியுள்ளனர்.
பக்தர்கள் முன்பதிவு செய்யும் எண்ணை தவறாக பயன்படுத்தி, வேறு நபர்களுக்கு டிக்கெட் புக்கிங் நடைபெறுவதாக பக்தர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நள்ளிரவு 3:10 மணியளவில் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்திலிருந்து அதற்கான மெயில் முன்பதிவு செய்தவர்களுக்கு வந்துள்ளது. அலுவல் நேரம் இல்லாத சமயத்தில் எப்படி மெயில் வரும்? என்கிற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்புகிறார்கள்.
இது தொடர்பாக முன்பதிவு செய்த மதுரையின் முக்கிய பிரமுகர் முத்துப்பாண்டி கூறுகையில், ‛‛மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் பங்கேற்பது என்பது அனைவரின் விருப்பம். இதில் பக்தர்களை அனுமதிப்பதில் பாரபட்சம் இருந்தது. பெரிய அளவில் பண புழக்கம் இருந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்தன. அவற்றை தவிர்க்க வேண்டும் என்பதற்காக தான், ஆன்லைன் பதிவு கொண்டுவரப்பட்டது. ஆனால், அதிலும் தற்போது முறைகேடு நடக்கிறது. நான் எனது விபரங்களை கொடுத்து முன்பதிவு செய்கிறேன். எனது தகவலை வைத்து, இன்னொருவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி நியாயமான நடவடிக்கையாக இருக்கும்? இது பற்றி கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டால், ‛கம்யூட்டர் எரர்’ என ஈஸியாக சொல்கிறார்கள். என் நண்பர்கள் வட்டாரத்தில் நிறைய பேருக்கு இது மாதிரி நடந்திருக்கிறது. 2 ஆண்டுகளுக்குப் பின் திருவிழா நடக்கிறது; எத்தனை பேருக்கு காண வேண்டும் என்கிற ஏக்கம் இருக்கும். ஆனால், அதிலும் இப்படி முறைகேடு நடந்தால் பக்தர்கள் என்ன தான் செய்வது?’’ என்று தனது வருத்தத்தை பதிவு செய்தார்.