மேலும் அறிய
அதிமுக ஆட்சி அமைந்ததும் மதுரை எய்ம்ஸ் திறக்கப்படும்... ஈ.பி.எஸ்., சொல்லவருவது என்ன?
திருமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கி, பூமி பூஜை போடப்பட்டது, இந்த ஆட்சியில் பணிகள் மெதுவாக நடக்கிறது, உள்ளூர் பிரச்னைகள் குறித்து - ஈ.பி.எஸ்., பேச்சு.

ஈ.பி.எஸ்., பேச்சு
Source : whats app
அதிமுக ஆட்சி அமைந்ததும் எய்ம்ஸ் திறக்கப்படும்…’’ - கிடப்பில் போட்டதாக இபிஎஸ் குற்றச்சாட்டு.
அதிமுக திட்டங்களை விளக்கிய ஈபிஎஸ்
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் 4-ஆம் கட்ட பயணம் தொடங்கியிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருப்பரங்குன்றம் தொகுதியை அடுத்து திருமங்கலம் தொகுதியில் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது.., ‘’ விவசாயிகளுடைய வாழ்வில் ஏற்றம் கொடுத்த அரசு அதிமுக அரசு. விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்புத் திட்டம் கொடுத்தோம், முதியோர் உதவித் திட்டம் மூலம் லட்சக்கணக்கான முதியோருக்கு மாத உதவித்தொகை கொடுத்தோம். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாய தொழிலாளி, ஏழைகள், தாழ்த்தப்பட்டோருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். கிராமப் புறங்களில் உள்ள ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும், என்ற கனவை நனவாக்க, 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கினோம். அதன்மூலம் 2818 பேர் ஒரு ரூபாய் செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகியிருக்கிறார்கள்.
எய்ம்ஸ் திறக்கப்படும்.
பள்ளிகளை தொடர்ச்சியாக தரம் உயர்த்தி அதிக பள்ளிகளைத் திறந்தோம். ஆனால் திமுக ஆட்சியில் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கல்வி கற்போர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என்ற பெருமை அதிமுக ஆட்சியில் கிடைத்தது. 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். இந்த நான்காண்டுகளில் திமுக அரசால் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட கொண்டுவர முடியவில்லை. அதற்கெல்லாம் திறமை வேண்டும். ஒரு திறமையற்ற முதல்வர் நம்மை ஆள்கிறார்.
அதுமட்டுமல்ல, 67 கலை அறிவியல் கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 4 பொறியியல் கல்லூரி, 7 சட்டக்கல்லூரி, 4 வேளாண்மைக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையம் என பல கல்லூரிகளைத் திறந்து இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை 2019ம் ஆண்டிலேயே அடைந்துவிட்டோம்.
எய்ம்ஸ் மருத்துவமனை அம்மா முதல்வராக இருக்கும்போது கோரிக்கை வைத்தார்கள். திருமங்கலம் தொகுதியில்தான் எய்ம்ஸ் வருகிறது. நான் முதல்வராக இருக்கும்போது மோடி அடிக்கல் நாட்டினார், திமுக அரசு அழுத்தம் கொடுத்து பணிகளை முடிக்க முடியவில்லை. அதிமுக அரசு அமைந்ததும் பணிகளை விரைவுபடுத்தி எய்ம்ஸ் திறக்கப்படும்.
ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம்
அரிசி, பருப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயர்ந்துவிட்டது. ஊழல் இல்லாத துறையே இல்லை. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் 2026 தேர்தல். ஆகவே தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார், சம்பளம் உயர்த்தப்படும் என்றார், ஆனால் செய்யவில்லை. இப்போது 100 நாள் வேலைத்திட்டம் 50 நாளாக சுருங்கிவிட்டது. தொழிலாளிகளுக்கான சம்பளத்தையே அதிமுக தான் மத்திய அரசிடம் போராடி வாதாடி, முதற்கட்டமாக ரூ.2999 கோடி பெற்றுக்கொடுத்தது. கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம். கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்
இந்த தொகுதிக்கு கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் அமைத்துக்கொடுத்தோம். மீனாட்சி மருத்துவமனை முதல் கப்பலூர் வரை 209 கோடி ரூபாயில் நான்குவழிச் சாலை அமைத்துக்கொடுத்தோம். திருமங்கலத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி கொடுத்தோம். திருமங்கலம் தொகுதி சூரக்கோட்டை விவசாயிகளுக்கு எதிராக விவசாய நிலங்களைப் பறித்து அமைக்கப்படும் தொழிற்பேட்டைக்கான அரசாணையை நிரந்தரமாக ரத்து செய்து பொன்விளைகிற பூமியை மீட்டுக்கொடுத்தது அதிமுக அரசு. குடிமராமத்து திட்டம் கொடுத்தோம்.
திருமங்கலம் புதிய பேருந்து நிலையத்துக்கு நிதி ஒதுக்கி, அடிக்கல் நாட்டப்பட்டது அதிமுக ஆட்சியில், மீண்டும் அதிமுக அரசு அமைந்ததும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். திருமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கி, பூமி பூஜை போடப்பட்டது, இந்த ஆட்சியில் பணிகள் மெதுவாக நடக்கிறது, அதிமுக ஆட்சி அமைந்ததும் விரைவுபடுத்தப்படும். திருமங்கலம் ஒன்றியத்தில் துணைக்கோள் நகரம் அமைக்கும் பணியும் அதிமுக அரசு அமைந்ததும் செயல்படுத்தப்படும். அடுத்தாண்டு தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்று முடித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















