கொடைக்கானல் : இரண்டு வருடங்களுக்கு பிறகு மலர் கண்காட்சிக்கு தயாராகும் பிரையண்ட் பூங்கா
இரண்டு வருடங்களுக்கு பிறகு மலர் கண்காட்சிக்கு தயாராகும் பிரையண்ட் பூங்கா, பூத்துக் குலுங்கும் லட்சக்கணக்கான மலர்களை காண கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருகின்றனர்.
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் தற்போது குளிர்ந்த சீதோஸ்ன சீசன் நிலவி வருகிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். இதற்கிடையே கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா, மலர் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறவில்லை.
இந்தநிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 59-வது ஆண்டு மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக ஊட்டி, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 3 லட்சம் மலர் செடிகள் கொண்டுவரப்பட்டு 3 கட்டங்களாக நடவு செய்யப்பட்டது. இதில் தற்போது பல்வேறு வகையான வண்ணப்பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், மேரிகோல்டு, பேன்சி வகைகள், பெட்டுன்னியா, குட்டைரக சால்வியா, கேலண்டுலா, பிளாக்ஸ், செல்லோசியா, டேலியா மற்றும் பல வண்ண ரோஜா உள்ளிட்ட பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன.
இதையொட்டி பூங்கா நிர்வாகம் சார்பில் பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிரையண்ட் பூங்காவில் தற்போது பூத்துக்குலுங்கும் வண்ண பூக்கள், பிரையண்ட் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிப்பதாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பூக்களுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி நடைபெற இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்