ஏமன் சிறையில் மரண தண்டனை: இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு காத்திருக்கும் முடிவு!
ஏமனில் விசாரணை நீதிமன்றம் கடந்த 2018-இல் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை விதித்தது.
ஏமன் நாட்டைச் சோ்ந்த தலால் அப்து மாஹதி என்பவரைக் கொலை செய்த வழக்கில் இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை வரும் ஜூலை 16 ஆம் தேதி நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு பெற்றுத் தர ஏமன் அரசு அதிகாரிகள் மற்றும் மாஹதி குடும்பத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி வரும் சமூக ஆா்வலா் சாமுவேல் ஜெரோம் பாஸ்கரன் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளாா்.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், செவிலியர் நிமிஷா பிரியா, 36. இவர் மேற்காசிய நாடான ஏமனில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2014ல், அவரது கணவர் மற்றும் பெண் குழந்தை இந்தியாவுக்கு திரும்பினர். அந்த ஆண்டில் ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டதால், நிமிஷா பிரியாவால் நாடு திரும்ப முடியவில்லை. கடந்த 2017 ம் ஆண்டு ஏமனில் செவிலியராக பணியாற்றிய போது, அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அது முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிரியாவின் தாய் மகளை மீட்க போராடி வருகிறார். ஏமன் நாட்டு சட்டப்படி ( இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்கள் கேட்கும் நஷ்ட ஈடாக பணம் வழங்குவதுடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னித்தால் குற்றவாளியின் தண்டனை தள்ளுபடி செய்யப்படும்) எனும் வழக்கம் உள்ளது. இதனை பயன்படுத்தி, நிமிஷா பிரியாவை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், வரும் 16 ம் தேதி நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை நிமிஷா தாயாரின் வழக்கறிஞராக செயல்பட்டு வந்த சாமுவேல் ஜெரோம் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை பின்னனி
ஏமனில் செவிலியராகப் பணியற்றிய நிமிஷா பிரியாவின் கணவரும், மகளும் நிதி நெருக்கடியால் 2014-இல் கேரளத்துக்கு திரும்பினா். உள்நாட்டு போா் காரணத்தால் செவிலியரான நிமிஷாவுக்கு (37) விசா கிடைக்கவில்லை. அவா் ஏமனில் தலைநகா் சனாவில் தங்கி, மாஹதியுடன் இணைந்து கிளினிக்கை தொடங்கினாா். பின்னா் நிமிஷாவின் வருமானம், நகைகள், கிளினிக்கின் உரிமம், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு, மாஹதி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. 2017-இல் ஏமன் சிறை வாா்டனின் உதவியுடன் மாஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போா்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தாா்.
ஏமன் பிரஜையான மஹதியைக் கொலை செய்ததாக கூறி நிமிஷா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு ஏமனில் விசாரணை நீதிமன்றம் கடந்த 2018-இல் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை விதித்தது. இதை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் கடந்த 2023, நவம்பரில் உறுதி செய்தது. கடந்த ஆண்டு இறுதியில், ஏமன் அதிபா் ரஷத் அல்-அலிமி இந்த மரண தண்டனையை உறுதி செய்தாா். இந்த உத்தரவு கடந்த ஜனவரி முதல் அரசு வழக்குரைஞா் வசம் இருந்து வந்தது. மஹதி குடும்பத்தினருடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படாத சூழலில், மரண தண்டனை உத்தரவை அரசு வழக்குரைஞா் சிறைத் துறைக்கு அனுப்பியுள்ளாா். இதைத்தொடா்ந்து, மரண தண்டனையை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.





















