தேனியில் 180 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 7 பேருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!
தேனி மாவட்டத்தில் 180 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 7 பேருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 1லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
கஞ்சா கடத்தல்
தென்மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை கஞ்சா கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு தென்மண்டல காவல்துறை தலைமையிலான சிறப்பு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். தேனி மாவட்டத்தில் 180 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 7 பேருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 1லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- Crime: டீ கடைக்காரரை கடத்தி ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டல் - மதுரையில் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைது
தேனியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை
கடந்த 2020 -ம் ஆண்டு மே மாதம் தேனி மாவட்டம் கம்பம் மணிகட்டி ஆலமர ரோடு பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி வாகன சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் 180 கிலோ கஞ்சா போதைப்பொருள் விற்பனைக்காக மூட்டை மூட்டையாக பதுக்கி கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து வாகனத்தில் இருந்த விசாரணையின் அடிப்படையில் தேனி மாவட்டம் கம்பம் உலகத் தேவர் தெரு பகுதியை சேர்ந்த சுகப்பிரியா, சுவாதி, ஈஸ்வரி, செல்லக்காளி, ஜெயக்குமார் சின்னமனூரை சேர்ந்த முத்துச்செல்வம், சந்தோஷ் உள்ளிட்ட 9 பேர் மீது தேனி மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவுப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இறுதிகட்ட விசாரணை நீதிபதி ஹரிஹரக் குமார் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கில் குற்றவாளிகள் 7 பேர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் 9 பேரில் இருவர் விடுவிக்கப்பட்ட நிலையில் மீதியுள்ள 7 பேருக்கும் தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபாரதமும் விதித்து உத்தரவிட்டார். இதனையடுத்து 7 பேரும் காவல்துறையினர் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.