2 வயது தோற்றம் கொண்ட 25 வயது மாற்றுத்திறனாளி பெண் - உதவிக்கரம் நீட்ட அரசுக்கு கோரிக்கை...!
’’25 வயது பெண்ணான சுதா தற்பொழுது இரண்டு வயது குழந்தை போல் தான் உள்ளார். இவரால் நடக்க முடியாது, வெகுநேரம் உட்கார்ந்து இருக்கவும் முடியாது, மாற்றுத்திறனாளியான இவர், கை ஜாடையில் தான் வேண்டியதை கேட்பார்'’
திண்டுக்கல் மாவட்டம் புளியராஜக்காபட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி மகாலட்சுமி காளியப்பன் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். மகாலட்சுமி முதல் குழந்தையை பெற்று சில வருடம் கழித்து மீண்டும் கருவுற்றார் கடந்த 18.03.1996 ஆம் ஆண்டு கோயமுத்தூரில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறக்கும்போதே உடல் வளர்ச்சி இன்றியும் மன வளர்ச்சி குன்றியும் பிறந்துள்ளது.
இந்த குழந்தைக்கு சுதா என பெயரிட்டு வளர்த்து வந்தனர். தற்போது அந்த பெண் குழந்தைக்கு 25 வயது ஆகிறது. 25 வயது பெண்ணான சுதா தற்பொழுது இரண்டு வயது குழந்தை போல் தான் உள்ளார். இவரால் நடக்க முடியாது, வெகுநேரம் உட்கார்ந்து இருக்கவும் முடியாது, மாற்றுத்திறனாளியான இவர், கை ஜாடையில் தான் வேண்டியதை கேட்பார் 24 மணி நேரமும் இவரை கண்காணிப்பதற்காக அருகே ஒருவர் இருந்தாக வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு மகாலட்சுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மேலும் காளியப்பன் தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.
இதனால் சுதாவை பார்த்துக்கொள்ள வீட்டில் வேறு யாரும் இல்லாத காரணத்தினால் தற்பொழுது காளியப்பன் அருகிலிருந்து தனது மகளை பார்த்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தான் பார்த்து வந்த சிறு காய்கறி வியாபாரத்தை விட்டுவிட்டு குழந்தையுடன் 24 மணி நேரமும் இருந்து வருகிறார். இவரது மகன் கார்த்தி மணி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். குடும்பத்திற்கு வருமானம் தேவைப்படுகின்ற காரணத்தினால் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு தற்பொழுது கூலி வேலைக்கு சென்று வருகிறார். தனது மகன் கார்த்தி மணியின் வருமானம் சுதாவிற்கு அரசாங்கம் வழங்கக்கூடிய மாற்றுத்திறனாளிக்கான மாதத்தொகை ஆயிரத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.
போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் சுதாவிற்கு மருத்துவ செலவு செய்வதற்கோ சத்தான உணவு வாங்கி கொடுப்பதற்கு கூட காளியப்பனால் செலவு செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. தற்பொழுது குடும்பத்தை நடத்துவதற்கு போதிய வருமானம் இல்லாமல் காளியப்பன் தவித்து வருகிறார். ஆகவே தமிழக அரசு மனவளர்ச்சி குன்றிய சுதாவிற்கு உதவி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்களும் உறவினர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற