மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - இட்லி மாஸ்டருக்கு 10 ஆண்டு சிறை
மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை சாப்பாடு வாங்கி தருகிறேன் என்று அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள நான் சின்ன மூலக்கரை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இட்லி மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு இவர் ஓட்டலில் வேலை பார்த்துவிட்டு மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்பொழுது அங்கு நெல்லையைச் சேர்ந்த ஒரு மூதாட்டியும், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணும் இருந்தனர். மகளின் மனநல சிகிச்சைக்காக நெல்லையிலிருந்து, மதுரை வந்து விட்டு பின்னர் ரயிலுக்காக இரவு நேரத்தில் காத்திருந்தனர் .
அப்போது அந்த வழியாக வந்த பாலமுருகன், நானும் நெல்லை தான் என மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துள்ளார். அவர்களுக்கு பாலமுருகன், தேநீரும் வாங்கிக் கொடுத்துள்ளார் . பின்னர் மூதாட்டி உறங்கிய பிறகு , மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை சாப்பாடு வாங்கி தருகிறேன் என்று அழைத்துச் சென்று ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து மூதாட்டி, திலகர்திடல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், மதுரை ஒட்டலில் வேலை பார்த்த இட்லி மாஸ்டர், பாலமுருகன் தான், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார் என்பது உறுதியானது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மதுரம், "மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதுரை ஓட்டலில் இட்லி மாஸ்டராக பணி புரிந்த நெல்லையை சேர்ந்த பாலமுருகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
திருவிழாவில் கலைநிகழ்ச்சிகளை நடத்த அனுமதி கோரிய 2 பேருக்கு அபராதம் விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன், உயர்நீதிமன்ற மதுரைக் தாக்கல் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"மதுரை மாவட்டம் குலமங்கலம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கரகாட்டம், கலை நிகழ்ச்சிகள், இன்னிசைக் கச்சேரி நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்ச்சிகளை நடத்தவும், அதற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், "திருவிழாக்களில் கலாசார நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை கடந்த 2017-ம் ஆண்டு, உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதன்படி, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளின்போது ஆபாசம் இருக்கக்கூடாது. இந்த கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளன.ஆனாலும் மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். எனவே அவருக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை அவர் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும்.மேலும், மனுதாரர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சம்பந்தப்பட்ட நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே நிகழ்ச்சிகளை நடத்த அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதே போல பல்வேறு கோவில் திருவிழாக்களை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்த திருச்சியை சேர்ந்த மாதவன், திண்டுக்கல்லைச் சேர்ந்த மனோகர் ஆகியோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயையும், தேனி மாவட்டத்தை சேர்ந்த சுப்பையனுக்கு 15 ஆயிரம் ரூபாயையும் அபராதமாக விதித்து உத்தரவிட்டார்.