தேனியில் கனமழை எதிரொலியால் ஆறுகள் , அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் பெய்த கனமழை எதிரொலியால் ஆறுகள் , அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு . சுற்றுலா தலமான கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அருவியில் குளிக்க தடை.
தேனி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் அதிகபட்சமாக போடிநாயக்கனூரில் 6.4 மி.மீ, சோத்துப்பாறை பகுதியில் 5.0 மி.மீ, வைகை அணை பகுதியில் 4.0 மி.மீ, ஆண்டிபட்டி பகுதியில் 4.2 மி.மீ, பெரியகுளம் 3.6 மி.மீ, தேக்கடியில் 6.4 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வீரபாண்டி, போடி, உத்தமபாளையம் உள்பட பல இடங்களிலும் மிதமான மற்றும் கனமழை பெய்தது.
பெரியகுளம் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதன் காரணமாக கல்லாற்று பகுதியில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் வராக நதியில் நேற்று முன்தினம் இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோர பகுதியில் இருந்த மரங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நேற்று காலை ஆற்றில் நீர்வரத்து சற்று குறைந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே மீண்டும் மழை பெய்தது. பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 3-ந் தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து தடை இன்று வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது போடி அருகே உள்ள மேலப்பரவில் இருந்து காய்கறிகள் மூட்டைகளை ஏற்றி கொண்டு டிராக்டர் ஒன்று போடிக்கு சென்று கொண்டிருந்தது. டிராக்டரை போடியை சேர்ந்த அருண் என்பவர் ஓட்டி சென்றார். டிராக்டரில் வியாபாரியான இப்ராகிம் மற்றும் 3 பெண்கள் சென்றனர். கொட்டக்குடி ஆற்றில் வழியாக சென்றபோது டிராக்டர் ஆற்றில் சிக்கி கொண்டது. இதையடுத்து டிரைவர் டிராக்டரை வெளியே எடுக்க முயன்றார். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் டிராக்டர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதனால் சுதாரித்து கொண்ட டிரைவர் உள்பட 4 பேரும் டிராக்டரில் இருந்து குதித்து ஆற்றின் கரையை அடைந்து உயிர் தப்பினர். இதற்கிடையே சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் அடித்து செல்லப்பட்ட டிராக்டர் பள்ளத்தில் மூழ்கியது.
தொடர் மழை எதிரொலியால் தேவதானப்பட்டியில் 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை உள்ளது. இந்த அணை மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 5 ஆயிரத்து 219 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ஜூலை மாதம் 31-ந் தேதி நீர்மட்டம் 55 அடியை எட்டியது. இதையடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே கடந்த மாதம் 15-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 55 அடியிலேயே நீடிக்கிறது. தொடர்ந்து 100 நாட்களாக அணையின் நீர்மட்டம் 55 அடியிலேயே உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 158 கன அடியாக உள்ளது. இந்த நீர் அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்