ஆடுகளத்திற்கு செல்ல தயாராகும் சண்டை சேவல்கள் - மாநில அளவில் நடைபெற இருக்கும் சேவல் சண்டை போட்டி
’’தமிழ்நாட்டில் ஜனவரி 25ஆம் தேதி வரை சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது’’
சேவல் சண்டை என்பது இரு சேவல்களிடையே நடைபெறும் சண்டையாகும். இயற்கையாக சேவல்கள், பெட்டைகளோடு இணை சேர்வதற்காக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. இந்தச் சண்டையில் வெற்றி பெரும் சேவல் பெட்டையுடன் இணை சேர்கிறது.
இந்த சேவல் சண்டையை சேவல்கட்டு, சாவக்கட்டு என்றும் அழைக்கின்றனர். சண்டைக்காக சேவல்களை தயார் செய்ய சேவல்கள் கட்டுத்தரை எனுமிடத்தில் கட்டப்படுகின்றன. இதனால் சண்டை சேவல்களை "கட்டு சேவல்கள்" என அழைக்கும் வழக்கம் உள்ளது. கட்டு சேவல்கள் சண்டையிட்டுக் கொள்வதால் சேவல்கட்டு என்று அழைக்கின்றனர். இதில் சாவக்கட்டு என்பது சேவற்கட்டு என்ற சொல்லிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதியில் சேவல் சண்டை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து போட்டியில் கலந்து கொள்வதற்கு தற்போது சேவல்களை தயார்படுத்தி வருகின்றனர் சண்டை சேவல் வளர்ப்போர் சங்கத்தினர். கம்பம், சின்னமனூர், கூடலூர் மற்றும் கிராம பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், கெடா முட்டு, ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில், சேவல் சண்டையும் முக்கிய இடம் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு சேவல் சண்டை நடத்துவதற்கு தமிழக அரசும் உயர்நீதிமன்றமும் தடை விதித்திருந்த நிலையில், இந்த வருடம் சேவல் சண்டை நடத்துவதற்கு பல விதிமுறைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது இருப்பினும் ஜனவரி 25ஆம் தேதி வரை சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கூடாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆடுகளத்திற்கு தயாராகும் சேவல்களுக்கு பிரத்தியேகமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. முதல் நாள் நீச்சல் பயிற்சி, இரண்டாம் நாள் சண்டை பயிற்சி என போட்டியில் கலந்து கொள்ளும் சேவல்களுக்கு பல பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றது.
மேலும், சண்டை சேவலுக்கு உணவில் சத்துள்ள சிறுதானியங்கள் மற்றும் பாதாம் பருப்பு வகைகளை கொடுத்து தயார்படுத்தி வருவதாக சண்டை சேவல் பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து உத்தமபாளையம் சண்டை சேவல் வளர்போர் கூறுகையில், "சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் அனுமதி பெற உள்ளோம். பொங்கல் பண்டிகையை அடுத்து மாநில அளவிலான சேவல் சண்டை போட்டி உத்தமபாளையத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து ஏராளமான சண்டை சேவல்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
மேலும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் சேவல் உரிமையாளருக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளது. போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெரும் சேவல்கள் 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதாக சண்டை சேவல் வளர்ப்போர் கூறுகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்