மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
அதிமுகவில் மீண்டும் இணைய ஓ.பன்னீர் செல்வம் முயற்சி செய்து வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவும்- அதிமுகவில் மோதலும்
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அக்கட்சியில் உட்கட்சி மோதல் உச்சத்தை தொட்டது. ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக இருந்த நிலையில் அவரை மாற்றி விட்டு தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்க திட்டமிட்டார். இதற்கான காய்கள் நகர்த்தப்பட்ட போது ஓ.பன்னீர் செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். ஜெயலலிதா நினைவிடத்தில் தர்ம யுத்தம் தொடங்கி அதிமுக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்த பரபரப்பான சூழலில் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததையடுத்து சசிகலா சிறைக்கு செல்லும் நிலை உருவானது. எனவே கட்சி மற்றும் ஆட்சியை அதிமுக மூத்த நிர்வாகியாக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார்.
இபிஎஸ்- ஓபிஎஸ் மோதல்
அடுத்த சில நாட்களில் பல்வேறு மாற்றங்கள் அதிமுகவில் ஏற்பட்டதையடுத்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைத்து ஆட்சியை 4 ஆண்டுகள் வழிநடத்தினார். இதனையடுத்து 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அதிமுகவை முழுவதுமாக கையில் எடுக்க கவனம் செலுத்த தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி, இதற்கு ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். தனது ஆதரவு நிர்வாகிகளோடு சட்ட போராட்டம் நடத்திய ஓ.பன்னீர் செல்வத்திற்கு தோல்விக்கு மேல் தோல்வியே கிடைத்தது.
திமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ
இதனையடுத்து எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மீண்டும் அதிமுகவில் இணைய ஓபிஎஸ் விருப்பம் தெரிவித்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். இதனால் என்ன செய்வது என தெரியாமல் திணறி வரும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உடன் இருந்த நிர்வாகிகள் மற்றொரு பக்கம் அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள். மாற்று கட்சிக்கு பல்டி அடிக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஓ.பன்னீர் செல்வத்தின் நம்பிக்கைக்குரிய நிர்வாகியாக இருந்த எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னையில் தங்களையும் திமுகவில் இணைத்துக்கொண்டனர்.
திமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
அந்த வகையில், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன், திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர் டி.எல்.நாராயணன், நெல்லை மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சாந்தகுமார், அமைப்புச் செயலாளர் சௌ.ராதா, நாங்குநேரி தொகுதி முன்னாள் செயலாளர் ஆர்.எஸ்.முருகன் மற்றும் நெல்லை மாநகர் பகுதிச் செயலாளர் சிவ அருணா, அருண்குமார், உள்ளிட்ட ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர்.





















