Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Political Party: தனிக்கட்சி தொடங்கினாலும், தேர்தலில் தனது ஆதரவு திமுக கூட்டணிக்கே என்று ஏற்கெனவே மல்லை சத்யா அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதுக் கட்சி ஒன்றைத் தொடங்கி உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகம் போல, திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் இந்தக் கட்சி தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை, அடையாறில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில், இன்று (நவம்பர் 20) கட்சியின் பெயரை அறிவித்தார் மல்லை சத்யா. கட்சியின் பெயரை முடிவு செய்ய புலவர் செவந்தியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்கள் புதிய அரசியல் இயக்கத்தின் பெயரை உருவாக்கி உள்ளனர்.
திமுக கூட்டணிக்கே ஆதரவு
தனிக்கட்சி தொடங்கினாலும், தேர்தலில் தனது ஆதரவு திமுக கூட்டணிக்கே என்று ஏற்கெனவே மல்லை சத்யா அறிவித்து இருந்தார். இதுகுறித்துப் பேசி இருந்த அவர், ’’திராவிட இயக்க கருத்தியலில் இருந்து பின் வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். மதவாத சக்திகள் வலுப்பெறக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து வருகிறோம்’’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மதிமுகவில் துரை வைகோ உடனான மோதல் காரணமாக, துணை பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யாவை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அண்மையில் நீக்கினார். இதைத் தொடர்ந்து புதுக் கட்சியை மல்லை சத்யா தொடங்கி உள்ளார்.
எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை
இந்த நிலையில் தவெகவுக்கு போட்டியாக திவெக என்று எத்தனை பெயரில் எவ்வளவு கட்சிகளை இறக்கினாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக வெற்றிக் கழக நெட்டிசன்கள், கருத்துக் கூறி வருகின்றனர்.























