தீபாவளி ஸ்பெஷல் ரயில் அறிவிப்பு: டிக்கெட் கிடைக்கலையா? தெற்கு ரயில்வேயின் சூப்பர் பிளான்!
தீபாவளி டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இதனால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா?

தீபாவளி (Diwali train ticket) பண்டிகை வரும் அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், சொந்த ஊருக்கு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இதனால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், தெற்கு ரயில்வே அதிகாரிகள் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னையில், தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் வசித்து வருகிறார்கள். தொழில், வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சொந்த ஊரை விட்டு சென்னையில் தங்கி வசித்து வருகிறார்கள்.சொந்த ஊரில் திருவிழா, பண்டிகை நாட்கள், பள்ளி விடுமுறை நாட்களில் குடும்பத்தினரோடு சொந்த ஊர் சென்று வருகிறார்கள். இப்படி சொந்த ஊருக்கு செல்லும்போது, சாதாரண நாட்கள் என்றால் பேருந்துகளிலோ அல்லது ரயில்களிலோ டிக்கெட் கிடைத்துவிடும். ஆனால் பண்டிகை நாட்களில் சொந்த ஊர் சென்று மீண்டும் சென்னை திரும்புவதற்குள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. அந்த அளவுக்கு கூட்ட நெரிசல் இருக்கும். ஒரு புறம் கூட்ட நெரிசல் என்றாலும், இன்னொரு புறம் டிக்கெட்டே கிடைக்காத நிலையும் ஏற்படும். ஆம்னி பேருந்துகளில் விலை பல மடங்கு அதிகமாக இருக்கும். ரயிலில் போக வேண்டும் என்றால் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் தான், நடப்பு ஆண்டில் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இதில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் பலவற்றிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதிகை, நெல்லை, குமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. தற்போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதால், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி முதல் ஏசி முதல் வகுப்பு வரை எல்லா படுக்கைகளும் நிரம்பிவிட்டதால் காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் சனி, ஞாயிறு விடுமுறையையும் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது என்பதால், எப்படியாவது சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாட யோசித்து வருகிறார்கள். சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரயில்களும் நிரம்பிவிட்டதால், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா என எதிர்பார்த்து உள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம் தான். எப்பொழுதும் ஒரு வாரத்திற்கு முன்பு தான் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில், தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் 2வது வாரத்தில் சிறப்பு ரயில் குறித்து அறிவிப்பு வெளியாகும். பெரும்பாலும் இந்த ரயில் பகல் மற்றும் இரவு நேரத்தில் செல்லக்கூடிய ரயிலாக இருக்கும். தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, கேரளா மார்க்கத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். இதேபோன்று, கூடுதல் பெட்டிகளை எந்தெந்த ரயில்களில் இணைக்க சாத்தியம் உள்ளதோ, அதற்கு ஏற்ப பெட்டிகள் அதிகரிக்கப்படும். எந்தெந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்பது ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.





















