Dindugal Special Camp: மாற்றுப் பாலினத்தவருக்கு அடையாள அட்டை - திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு முகாம்..!
நலத்திட்ட உதவிகள் பெறும் பொருட்டு திருநம்பி/திருநங்கை என்னும் அடையாள அட்டை மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது
திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுப் பாலினத்தவர்களில், மூன்றாம் பாலினர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்களுக்காக, மாவட்ட அளவில் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. ஜூலை 28 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10.00 மணிமுதல் நடைபெற உள்ளது. இம்முகாமில் மாற்றுப் பாலினத்தவர்கள் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் முகாமில் கலந்துக்கொள்ளும் மூன்றாம் பாலினர்கள் தாங்கள் வசிக்கும் முகவரி தொடர்பாக ஏதாவது ஒரு ஆவணங்களுடன் கலந்துக்கொள்ளும்படி தெரிவிக்கப்படுகிறது.
மாற்றுப் பாலினர் நலன்:
சமுதாயத்தில் கவனிப்பாரற்று பல்வேறு பிரச்சனைகளை மூன்றாம் பாலினர் எதிர்கொள்கின்றனர். சமூகநலத்துறை மூலமாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அனைத்து வகையான நலத்திட்ட உதவிகள் பெறும் பொருட்டு திருநம்பி/திருநங்கை என்னும் அடையாள அட்டை மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மாற்றுப் பாலினத்தவருக்கு சமூக பாதுகாப்பை அளிக்கவும், முழுமையான சமூக அங்கீகாரத்தை அளிக்கவும், தமிழ்நாடு மாற்றுப் பாலினத்தவர் நல வாரியம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
”நான் இந்த உடலில் இப்போது முழுமையானவனாக உணர்கிறேன்!” – திருநம்பி எலியட் பேஜ்!
இந்த வாரியம் மூலம் மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு இதுநாள்வரை 11,449 மூன்றாம் பாலினத்தவர்கள் கண்டறியப்பட்டு 6,248 மூன்றாம் பாலினத்தவருக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இவ்வாரியத்தின் வாயிலாக மூன்றாம் பாலினத்தாருக்கு சொந்தமாக தொழில் செய்வதற்காக ரூ.50,000/- வழங்கப்பட்டு வருகிறது.
கோவிட்-19 நிவாரண தொகை, 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழ்மை நிலையிலுள்ள மூன்றாம் பாலினத்தோருக்கு ரூ.1000/-வீதம் மாதாந்திர ஓய்வூதியத் தொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (white board), சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் மாற்றுப் பாலினத்தோர் நல வாரியத்தில் பதியப்பெற்று வழங்கப்படும் அடையாள அட்டையுடன் பயணம் மேற்கொள்ளும் திருநங்கைகள் அனைவரும் கட்டணமில்லா பயண சீட்டுடன் பயணம் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு முன்னதாக அனுமதி வழங்கியது.
மேலும் வாசிக்க: