TN Transgender as Third Gender : கட்டணமில்லா பயணச்சீட்டுகளில் ‘திருநங்கை’ என்கிற பெயர் இடம்பெறும்! - நர்த்தகி நட்ராஜ்
”இந்த புகாரை முதலமைச்சரின் பார்வைக்கு எடுத்துச் சென்றுள்ளோம். அவர் வழியாக போக்குவரத்துத்துறையின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும்.”
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் போக்குவரத்துக்கான பயணச்சீட்டுகள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன. அரசுப்பேருந்துகளில் பெண்களுக்கான இலவசப் போக்குவரத்து என்கிற அரசின் அறிவிப்பை அடுத்து மாற்றுப்பாலினத்தவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்துமா என்கிற கேள்வி எழுந்தது. இதையடுத்து திருநர்களும் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்கிற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள்,அவர்களுக்கான உதவியாளர்கள், மகளிர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என அச்சிடப்பட்ட கட்டணமில்லாப் புதிய பேருந்து பயணச் சீட்டுகள் அண்மையில் அறிமுகப்படுத்தபட்டன. இதில் திருநர்களை மூன்றாம் பாலினத்தவர் என அரசு அடையாளப்படுத்தியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து பால்புதுமை இதழின் ஆசிரியர்களில் ஒருவரான கிரீஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்ததில்,
’பாலின அடையாளங்களை வரிசைப்படுத்துவது பாலின சமத்துவத்துக்கு எதிரானது. தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சாதாரண அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் எனும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார். அப்போது இந்த அறிவிப்பு திருநங்கைகளுக்கும் பொருந்துமா எனும் கேள்வி எழுந்தது. திருநங்கைகளும் பெண்கள் தான் எனும் அடிப்படையில் அவர்களும் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்கிற கருத்தும் நிலவியது. பின்னர் தனது டிவீட்டரில் இதனைப் பரிசீலிப்பதாகக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் பிறந்தநாளன்று திருநங்கைகளும் இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம் எனும் அறிவிப்பினை வெளியிட்டார்.
பால்புதுமையினரின் சுயமரியாதை மாதமான ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பும் தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் குழு உறுப்பினராக முனைவர். நர்த்தகி நடராஜ் நியமியக்கப்பட்டதும் உண்மையிலேயே மிகவும் வரவேற்கத்தக்க முடிவுகளாக இருந்தன. ஆனால் அதனைத் தொடர்ந்து இலவசமாக பயணிப்பவர்களுக்கான பயணச்சீட்டு அரசு சார்பில் அச்சடிக்கப்பட்டிருப்பதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாயின. அந்த பயணச்சீட்டுகளில் ‘மூ.பா, மூன்றாம் பாலினத்தவர்’ என அச்சடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
‘திருநங்கை’ எனும் பதத்தை கலைஞர் அவர்கள் தான் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார். திருநங்கை சமுதாயமும் அந்தப் பதத்தை மகிழ்ச்சியுடன் ஏற்று இன்றுவரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் திருநர்கள் தினம் கொண்டாடப்பட்டபோது திருநங்கை எனும் வார்த்தைக்கு பதிலாக மூன்றாம் பாலினத்தவர் எனும் வார்த்தை சுற்றறிக்கைகளில் பயன்படுத்தப்பட்டது. பால்புதுமையினர் சமூகம் அதனைக் கடுமையாக எதிர்த்தது. ஆனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தற்போதைய திமுக ஆட்சியில் மாற்றம் ஏற்படும் என நினைத்துக் கொண்டிருக்கும் போது அதே வார்த்தை பயன்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இலவசப் பேருந்து பயண அறிவிப்பிலும் திருநங்கையர் தின வாழ்த்துச் செய்தியிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநங்கை எனும் பதத்தையே உபயோகித்திருக்கிறார்.
ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘ஒன்றிணைவோம் வா’ வலைப்பக்கத்தில் மூன்றாம் பாலினத்தவர் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் டிவிட்டர் பக்கத்திலும் மூன்றாம் பாலினத்தவர் என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் இன்று சட்டப்பேரவையில் திருநங்கைகள் எனும் வார்த்தை அறிவிப்புகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த முரண்பாடு வருத்தத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.
திருநங்கைகள் மூன்றாம் பாலினத்தவர் என்று அழைக்கப்படுவதால் ஆண்களும், பெண்களும் முதல் இரண்டுப் பாலினத்தைச் சார்ந்தவர்கள் எனும் தோற்றம் ஏற்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் திருநம்பிகள் நான்காம் பாலினத்தவராக அடையாளப் படுத்தப்படுவார்களா எனும் கேள்வி வருகிறது. பாலின அடையாளங்களை வரிசைப்படுத்துவது பாலின சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் எதிரானது. ஆண் , பெண் அடையாளங்களை சார்ந்து திருநங்கைகளுக்கான பெயரைத் தேர்வு செய்வது, எதிர்பாலீர்ப்பு கொண்ட அடையாளப்படுத்தப்பட்ட பாலினத்தோடு வாழும் மக்கள் திருநர்களை விட உயர்ந்தவர்கள் என்பது போன்ற தோற்றமும் ஏற்படுகிறது. மாறிய பாலினம் என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம் என்கிற வாதங்களும் வைக்கப்படுகின்றன. இவையுமே திருநர்கள் ஆண், பெண் என்பதில் இருந்து திரிந்தவர்கள் என்கிற விளக்கத்தையே முன்வைக்கின்றன. மேலும் திருநங்கைகள் பெண்கள் என்பதாலும் மூன்றாம் பாலினத்தவர், மாறிய பாலினத்தவர் போன்ற வார்த்தை பயன்பாடுகளை ஏற்க முடியாது.
“மகளிர் நலன் -உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்து சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னமே தெரிவித்திருக்கிறார். எனவே பேருந்து பயணச்சீட்டில் மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் ‘மூன்றாம் பாலினத்தவர்’ எனும் சொல்லுக்கு பதிலாக ‘திருநங்கை’ எனும் சொல்லை பயன்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு இலவசப் பயணச்சீட்டில் பயணிக்கும் உரிமை திருநம்பிகளுக்கும் வழங்கப்படவேண்டும். ‘மாற்றுத் திறனாளிகள்’ எனும் பதம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக இருப்பதைப் போல ‘திருநர்’ எனும் பொதுப்பதத்தை திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு கொடுக்கப்படும் பயணச்சீட்டில் பயன்படுத்தவேண்டும்.
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைத்தது கலைஞர் தலைமையிலான அரசு. அவரது வழியிலேயே மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசும் திருநர்களின் நலன் மீது அக்கறையோடு செயல்படும், அவர்கள் சுயமரியாதையோடு வாழ வழி செய்யும் என நம்புகிறோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
திருநங்கைகளை சுயமரியாதையோடு அழைக்கும் பெயர் மாற்றத்தை கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிதான் முதன்முதலில் கொண்டுவந்தது. அவர்வழி வந்தவர்களின் அரசு திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர் என்று அழைக்கலாமா? இதுகுறித்து மாற்றங்கள் எதுவும் கொண்டுவரப்படுமா?
இதுகுறித்து முதலமைச்சரின் மாநில வளர்ச்சிக்கான கொள்கைக் குழுவின் உறுப்பினர் டாக்டர் நர்த்தகி நட்ராஜ் கூறுகையில், ‘இந்த புகாரை முதலமைச்சரின் பார்வைக்கு எடுத்துச் சென்றுள்ளோம். அவர் வழியாக போக்குவரத்துத்துறையின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும். பயணச்சீட்டுகளில் திருநங்கை என்கிற பெயர் இடம்பெறும். மற்றபடி திருநங்கை என்கிற சுயமரியாதை மிக்க பெயரை மூன்றாம் பாலினத்தவர் என என்ன காரணத்துக்காகவோ கடந்த அதிமுக அரசு 2019ல் மாற்றியது. இந்த பெயர் மாற்றத்தை மீண்டும் திருத்தும் நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது’ எனக் கூறினார்.
Also Read: தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா!