கொடைக்கானலில் மர்மான முறையில் உயிரிழந்த சிறுமி - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
’’கடந்த வாரம் புதன் கிழமை 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி உடல் கருகிய நிலையில் பள்ளி சமையல் அறையில் மீட்பு’’
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாச்சலூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கடந்த வாரம் புதன் கிழமை அன்று 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி உடல் கருகிய நிலையில் பள்ளியின் சமையலறை வளாகத்தில் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி பரிதமாக உயிரிழந்தது. இது குறித்து தாண்டிக்குடி காவல் துறையினர் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்,
இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தற்போது வரை காவல் துறையினர் கண்டு பிடிக்கவில்லை என குற்றம்சாட்டியும், சிறுமி உயிரிழந்த தினம் பள்ளிக்கு வருகை புரிந்த 3 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கொடைக்கானல் பகுதியை சேர்ந்த சுமார் 5 ஊர் கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாகவில்லை எனவும் அடித்து துன்புறுத்தியதற்கான உடலில் எந்த ஒரு காயத்திற்கான அடையாளம் இல்லை எனவும் காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுமி இறப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் காவல்துறையினர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விசாரணை செய்து வருகின்றனர்.
பள்ளி சமையலறை அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு.. கொலையா? போராடும் கிராமம்
இது ஒரு புறம் இருக்க கடந்த ஒரு வாரமாக சிறுமியின் இறப்பு குறித்து நீதி கிடைக்க வேண்டுமென்று திண்டுக்கல், தேனி உட்பட்ட மாவட்டங்களில் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சிறுமி இறப்பு குறித்து திண்டுக்கல் காவல்துறை சார்பில் தனிப்படை அமைத்து விசாரித்து வந்த நிலையில் தற்போது இந்த விசாரணையை CBCIDக்கு மாற்றி விசாரணை செய்ய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.