திண்டுக்கல்லில் சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு: தம்பதிக்கு ஆயுள் தண்டனை
உறவினர் வீட்டில் வசித்த சிறுமியை தங்களுடன் சில நாட்கள் அனுப்பி வைக்குமாறு, சிறுமியின் பெற்றோரிடம் கேட்டு கொண்டனர். குழந்தை இல்லாததால் ஆசையுடன் கேட்பதாக நினைத்து, சிறுமியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்: வடமதுரை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் வயது 32. இவர் அப்பகுதியில் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி கிருத்திகா 22. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. ராஜேஷ்குமாரும், கிருத்திகாவும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் வசிக்கிற தங்களது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தனர். அந்த உறவினரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஒரு தம்பதிக்கு 4 வயதில் மகள் இருந்துள்ளார். அந்த சிறுமியிடம் ராஜேஷ்குமாரும், கிருத்திகாவும் நெருங்கி பழகி வந்துள்ளனர். சிறுமியும் அவர்களுடன் நன்றாக பழகியுள்ளார். இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராஜேஷ்குமார், கிருத்திகா ஆகியோர் பல்லடம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.
அப்போது உறவினர் வீட்டில் வசித்த சிறுமியை தங்களுடன் சில நாட்கள் அனுப்பி வைக்குமாறு, சிறுமியின் பெற்றோரிடம் கேட்டு கொண்டனர். குழந்தை இல்லாததால் ஆசையுடன் கேட்பதாக நினைத்து, சிறுமியை அவர்களுடன் பெற்றோர் அனுப்பி வைத்தனர். அதன்படி சிறுமியை தங்களது சொந்த ஊரான செங்குளத்துப்பட்டிக்கு ராஜேஷ்குமார், கிருத்திகா தம்பதி அழைத்து வந்தனர். இதையடுத்து ஒருசில நாட்களில் சிறுமி கீழே விழுந்து காயமடைந்ததாக கூறி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையும் அதை உறுதி செய்தது. இதுதொடர்பாக வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமார், கிருத்திகா ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி கருணாநிதி வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் அமுதா ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி கருணாநிதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ்குமாருக்கு இந்திய தண்டனை சட்டம் கொலை 302-ன் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், இளம்சிறார் நீதிசட்டம் பிரிவு சிறுவர்களை தாக்குதல் 75-ன் கீழ் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் ராஜேஷ்குமாரின் மனைவி கிருத்திகாவுக்கு இ.த.ச. 302-ன் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், இளம்சிறார் நீதி சட்டம் 75-ன் கீழ் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.