"என் மண் என் உரிமை"... வாழ்வாதாரத்தை இழந்த பழனி மக்கள்.. கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறி "என் மண் என் உரிமை" என்ற பெயரில் பொதுமக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் நீதிமன்ற உத்தரவால் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாக கூறி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொட்டும் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக கூறி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் நியமிக்கப்பட்டு குழு ஒன்று அமைக்கப்பட்டு கிரிவலப் பாதையில் கார், வேன், பேருந்தில் இருந்து இருச்க்கர வாகனங்கள் வரை எந்த விதமான வாகனங்கள் செல்லாத வாரும், கிரிவல பாதை அடைக்கப்பட்டது.
இதன் பேரில் இருந்த தரைக்கடைகள், தள்ளுவண்டிகள், அனைத்தும் அகற்றப்பட்டன. மேலும் கிரிவல வீதியில் எந்த விதமான வாகனமும் செல்லக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்ததால் அனைத்து பகுதிகளும் தடுப்புகள் அமைக்கப்பட்டது.
மேலும் ஆக்கிரமிப்பு என தெரிவித்து 200க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இதனால் அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறி "என் மண் என் உரிமை" என்ற பெயரில் பொதுமக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது பழனி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சி ஜாதி மதம், பேதமின்றி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது பலத்த மழை பெய்த நிலையில் அனைவருக்கும் மழையில் நனைந்தவாரு குடை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றனர். மேலும் அடிவாரத்தில் அதிகப்படியான கடைகள் அடைக்கப்பட்டு தமிழக அரசு எந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் மேலும் அதிகரிக்கும் என போராட்டக் குழு தெரிவித்துள்ளது.