லஞ்சத்தை லட்ச லட்சமாக கேட்ட அமலாக்கத்துறை அதிகாரி! சினிமா பாணியில் சிக்கியது எப்படி? முழு விவரம்
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற மதுரை அமலாக்கத்துறை அதிகாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார் இவரது மருத்துவமனை மற்றும் வீடுகளில் அதிரடி சோதனை ஈடுபட்டு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பதவி உயர்வு பெற்று அமலாக்கத்துறை அதிகாரியாக கடந்த 2023 ஆம் ஆண்டு அன்கிட் திவாரி பணியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்ட அமலாக்கத்துறை அதிகாரி திவாரி சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்க துறைக்கு விசாரணைக்கு வந்துள்ளது என்றும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றால் ரூ 3கோடி தர வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரி மிரட்டியுள்ளார். இதற்கு டாக்டர் சுரேஷ் பாபு ஒத்துக் கொள்ளாததால் இறுதியாக ரூ 51 லட்சம் தந்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தி மிரட்டி உள்ளார்.
இதனையடுத்து கடந்த மாதம் 01.11.23 அன்று மதுரை - நத்தம் சாலையில் 20 லட்சம் டாக்டர் சுரேஷ்பாபு கொடுத்துள்ளார். மீண்டும் நேற்று தொடர்பு கொண்ட அமலாக்கத்துறை அதிகாரி திவாரி மீதியுள்ள 31 லட்சத்தை தர வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார். இந்நிலையில் மருத்துவர் சுரேஷ்பாபு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜனிடம் நேற்று இரவு புகார் அளித்தார். புகார் பேரில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்து ரசாயனம் தடவிய ரூபாய் 20இலட்சத்தை டாக்டர் சுரேஷ்பாபுவிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்று 01.12.23 அதிகாலை
திண்டுக்கல் - மதுரை சாலையில் உள்ள தோமையார்புரம் அருகே அமலாக்கத்துறை அதிகாரி திவாரியின் காரில் உள்ள டிக்கியில் டாக்டர் சுரேஷ்பாபு பணத்தை வைத்து உள்ளார். இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரி திவாரி காரை எடுத்துக் கொண்டு வேகமாக மதுரை நோக்கி சென்றார். போலீசார் தன் காரை விரட்டி வருவதை கண்ட அமலாக்கத்துறை அதிகாரி வேகமாக காரை விரட்டி உள்ளார். காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் விரட்டி சென்றனர். பின்னர் கொடைரோடு சுங்கச்சாவடியில் வைத்து மடக்கி பிடித்தனர். லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரி போலீசார் கைது செய்தனர். மேலும் லஞ்சம் வாங்க பயன்படுத்தப்பட்ட கார் பணம் 20 லட்சம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி திவாரியிடம் திண்டுக்கல் இபி காலனியில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் டிஎஸ்பி நாகராஜன் ஆகியோர் கடந்த 12 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இவருக்கு பின்னணியில் யாரும் உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. லஞ்சம் பெற்றதாக அமலாகத் துறை அதிகாரி திண்டுக்கலில் கைது செய்து நீதிமன்றத்தின் முன் ஆதரவு படுத்தபட்ட நிலையில் 15 நாட்கள் சிறையில் அடைக்க திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனா உத்தரவு!இந்த சம்பவம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.