திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு போட்டி - ஆர்வத்துடன் களம் இறக்கப்பட்ட காளைகளுடன் விளையாடிய வீரர்கள்
திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார், தாசில்தார் சுகந்தி ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அய்யாப்பட்டியில் உள்ள காளியம்மன், கருப்புசாமி கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 312 காளைகள் போட்டியில் பங்கேற்க அழைத்து வரப்பட்டன. அதனை கால்நடை மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். அதில் 300 காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன. இதேபோல் அரசு மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 100 மாடு பிடி வீரர்கள் 5 சுற்றுகளாக களம் இறங்க தயாராகினர்.
இதைத்தொடர்ந்து காலை 9.45 மணிக்கு திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார், தாசில்தார் சுகந்தி ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வாடிவாசல் முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் வாடிவாசலில் இருந்து முதலில் ஊர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து மற்ற காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் அடக்க காளையுடன் விளையாடினர்.
அவர்களிடம் இருந்து சில காளைகள் பிடிபடாமல் ஓடியது. ஒரு சில காளைகள் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் நின்று விளையாடியது. அப்போது பார்வையாளர்கள் கோஷமிட்டு மாடு பிடி வீரர்களை உற்சாகப்படுத்தினர். இதில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்களான மதுரை மாவட்டம் பாலமேட்டை சேர்ந்த ராஜா (வயது 23), திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பிரதீப்குமார் (55), கேசம்பட்டியை சேர்ந்த சிட்டன் (28), சின்ன கற்பூரம்பட்டியை சேர்ந்த அரவிந்த் (20) உள்பட 10 பேர் காயமடைந்தனர். இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டில் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும், காளைகளை மடக்கி பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பரிசுகளை வழங்கினார். அதில் வெள்ளி காசுகள், கட்டில், பீரோ, சைக்கிள், குக்கர், மின்விசிறி, நாற்காலிகள், வேட்டி, துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை காண நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து இருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்