திண்டுக்கல்லில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் - இதுவரை 4 பேர் கைது
’’நாட்டு துப்பாக்கி வைத்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களாகவே கொண்டுவந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை’’
திண்டுக்கல் சாஸ்திரிநகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் ராகேஷ் (26) இவர் மேற்கு மரியநாதபுரம் அருகே உள்ள செட்டிகுளம் என்ற இடத்தில் நேற்று இரவு தனது நண்பருடன் மது அருந்தி கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவ குறித்து தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். துப்பறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டது. சுட்டுக்கொல்லப்பட்ட ராகேஷின் தந்தையான மாணிக்கம் செட்டிகுளம் பகுதியில் மீன் பிடிப்பதற்கான குளத்தை குத்தகைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் எடுத்திருந்ததும் அதில் போட்டி காரணமாக ஏதேனும் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்திலும் முதற்கட்ட விசாரணையை போலீசார் துவக்கினர்.
குத்தகை எடுப்பதில் தகராறு ? - திண்டுக்கல்லில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
இந்த நிலையில் நள்ளிரவில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திண்டுக்கல் நகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ், கணேசமூர்த்தி, ஜான் சூர்யா, மரியபிரபு ஆகிய நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக போலிசார் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த கொலைக்கான காரணமாக போலிசார் கூறுகையில் செட்டிக்குளம் பகுதியில் உள்ள மீன்பிடிப்பதற்கான குளத்தை குத்தகைக்கு எடுக்கும் போட்டியில் நடந்ததாக கூறினர். மேலும் இந்த சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும்.
மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். குற்றவாளிகளிடம் இருந்து இரண்டு அறிவாள், இவர்களால் தயாரிக்கப்பட்ட நாட்டுதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் திண்டுக்கல் பகுதியில் நாட்டு துப்பாக்கி வைத்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களாகவே கொண்டுவந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும், நாட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் யாரையும் போலிசாரால் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாவார்கள் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் குற்ற சம்பவம் கட்டுப்படுத்த இதுவரையில் அதிகமான குற்றவாளிகள் மீது குண்டாஸ் போடப்பட்டு வருகிறது. மேலும் குற்றங்களை தடுப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.