ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகின் மிகவும் புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் 3 போட்டிகளையும் ஆஸ்திரேலியா வென்று தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்தின் பேஸ்பால் யுத்தி முற்றிலும் தோல்வியடைந்த நிலையில், மெல்போர்னில் இரு அணிகளும் மோதிய 4வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி்யது.
பந்துவீச்சின் சொர்க்கபுரி:
ஆடுகளத்தில் வழக்கத்தை விட புற்கள் அதிகளவு இருந்ததால் இந்த மைதானம் முழுக்க முழுக்க பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 45.2 ஓவர்களில் ஆல் அவுட்டாக, இங்கிலாந்து 29.5 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்து இருந்தது.
இதையடுத்து, 46 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா இன்று 2வது இன்னிங்சைத் தொடங்கியது. நைட் வாட்ச்மேனாக தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட போலந்த் 6 ரன்களில் அவுட்டாக, அடுத்தடுத்து ஆஸ்திரேலியா விக்கெட்டைப் பறிகொடுத்தது. வெதரால்ட் 5 ரன்களிலும், லபுஷேனே 5 ரன்னிலும் அவுட்டானார்கள். அடுத்து ஜோடி சேர்ந்த ஹெட் - ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆடினர்.
178 ரன்கள் டார்கெட்:
சவாலானா இந்த மைதானத்தில் சிறப்பாக ஆடி அரைசதத்தை நெருங்கிய டிராவிஸ் ஹெட் 67 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ப்ரைடன் கார்ஸ் பந்தில் போல்டானார். அடுத்து வந்த கவாஜா டக் அவுட்டாக, அலெக்ஸ் கேரி 4 ரன்களில் அவுட்டாக கிரீன் சற்று நிதானமாக ஆடி 19 ரன்கள் எடுத்தார். இதனால், ஆஸ்திரேலியா 100 ரன்களை கடந்தது. நாசர், ஸ்டார்க் டக் அவுட்டாக ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 34.3 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஸ்மித் 39 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ப்ரைடன் கார்ஸ் 4 விக்கெட்டுகளையும், டங் 2 விக்கெட்டுகளையும், கேப்டன் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 178 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஜாக் கிராவ்லி - பென் டக்கெட் ஆட்டத்தை தொடங்கினர். டக்கெட் அதிரடியாக ஆடினார். கிராவ்லி நிதானமாக ஆடினார். 51 ரன்களை இங்கிலாந்து எட்டியபோது டக்கெட் 34 ரன்களில் அவுட்டானார். அவர் 26 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் அவுட்டானார். அவ்ர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ப்ரைடன் கார்ஸ் 6 ரன்னில் அவுட்டானார்.
இங்கிலாந்து அபார வெற்றி:
கிராவ்லி - பெத்தேல் ஜோடி அதன்பின்பு பொறுப்புடன் ஆடினார். இதனால், இங்கிலாந்து 100 ரன்களை கடந்தது. கிராவ்லி 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். இங்கிலாந்துக்காக பொறுப்புடன் ஆடிய ஜேக்கப் பெத்தேல் 46 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதுன்பின்னர் வந்த ஜோ ரூட் 15 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 ரன்னிலும் அவுட்டானாலும், ஹாரி ப்ரூக் வெற்றியை உறுதி செய்தார். இதனால், 32.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எட்டிய இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடரை இழந்தாலும் இந்த வெற்றி இங்கிலாந்து அணிக்கு உற்சாகம் தரும் வகையில் அமைந்துள்ளது. முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளும், 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்திய ஜோஷ் டங் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
போட்டி தொடங்கி 2 நாட்கள் கூட முழுமை அடையாமல் இந்த போட்டி முடிந்துள்ளது. மைதானம் முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்ததற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.




















