ஒரே பாணியில் 3 நாட்களில் 2 கொலைகள்... கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலங்கள் - அதிர்ச்சியில் திண்டுக்கல் மக்கள்
ராமையன்பட்டி பிரிவு அருகே கை, கால்கள் கட்டிய நிலையில் அட்டைப்பெட்டிக்குள் ஆண் சடலம் - திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை.

திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு தூக்க மாத்திரை கொடுத்து , கை, கால்களை கட்டி படுகொலை செய்து கிணற்றில் போட்ட 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் கணேசன் என்பவரின் தோட்டத்து கிணற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயைத் துணியால் கட்டி படுகொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கிடந்தார். தகவலறிந்த தாடிக்கொம்பு போலீசார் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், உத்தரவின் பேரில் புறநகர் DSP. சிபிசாய் சௌந்தர்ய்ன் மேற்பார்வையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர்கள் சூரியகலா, முனியாண்டி மற்றும் காவலர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட நபர் வேடசந்தூர், பூத்தாம்பட்டியை சேர்ந்த ஜோதிமணி(37) என்றும் இவருக்கும் வேடசந்தூரை சேர்ந்த முருகன் மனைவி கோமதி (33) என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோமதிக்கு ஸ்டாலின் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதற்கு ஜோதிமணி இடையூறாக இருந்ததால் கோமதி அவரது தந்தை, நடராஜன் 60 தாய் நீலா (55), ஸ்டாலின்(27), ஆரோக்கியசாமி(37), குட்டி(24) ஆகியோர் வேடசந்தூரில் வீட்டிற்கு ஜோதிமணியை வரவழைத்து உளுந்தங்கஞ்சியில் 4 தூக்க மாத்திரை மற்றும் வரக்காபியில் 4 தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்து கை, கால்கள், வாயை கட்டி உடலை சென்னமநாயக்கன்பட்டி அருகே கிணற்றில் வீசி சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தாடிக்கொம்பு போலீசார் 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திண்டுக்கல், பழனி பைபாஸ் ராமையன்பட்டி பிரிவு அருகே உள்ள தரைபாலத்திற்கு அடியில் ஒரு அட்டைப்பெட்டி மர்மமான முறையில் கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தாலுக்கா போலீஸார் அட்டைப் பெட்டியை பிரித்துப் பார்த்தபோது அதில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், உடலில் சிறு சிறு காயங்கள் இருந்துள்ளது. இது தொடர்ந்து தாலுக்கா காவல்துறையினர் அப்பகுதியில் தடயங்களை சேகரித்தனர். இறந்த நபரை வேறு இடத்தில் கொலை செய்து சம்பவ இடத்தில் கொண்டு வீசி சென்று இருக்கலாம் என்று காவல்துறையினர் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இறந்த ஆணின் சடலத்தை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் இறப்பிற்கான காரணம் என்ன ? அவர் கொலை செய்யப்பட்டிருந்தால் கொலையாளிகள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இதேபோன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் சாக்கு முட்டையில் கட்டி கிணற்றில் கிடந்தது குறிப்பிடத்தக்கது. மூன்று நாட்களில் இரண்டு கொலைகள் ஒரே பாணியில் நடைபெற்றதால் திண்டுக்கல் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.





















