சென்னை - நெல்லை சிறப்பு ரயில் அறிவிப்பு: ஜூன் 21-ல் பயணம்
பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு ரயில்வேயும் அவ்வப்போது சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. வரும் சனிக்கிழமை சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் ஜூன் 21 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வார விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக இந்த சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வரும் ஞாயிற்றுக்கிழமை நெல்லையில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து வார இறுதி நாட்களில் சொந்த ஊர் செல்வதை மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால், ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு வார இறுதிநாட்களில் சிறப்பு பேருந்துகளையும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது.
அதேபோல பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு ரயில்வேயும் அவ்வப்போது சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், வரும் சனிக்கிழமை சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வண்டி எண் 06089 / 06090 சென்னை எழும்பூரில் இருந்து - நெல்லைக்கு 21 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை நெல்லைக்கு காலை 8.45 மணிக்கு சென்றடையும்.
அதேபோல, எதிர் வழித்தடத்தில் நெல்லையிலிருந்து ஜூன் 22ம் தேதி (ஞாயிறு) இரவு 9.40-க்கு புறப்படும் இந்த ரயில், மறு நாள் காலை 8.15-க்கு எழும்பூர் வந்தடையும் என்றும் இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகிறது.
இந்த ரயிலில் ஏசி இரண்டு அடுக்கு 2 பெட்டிகள், ஏசி மூன்றடுக்கு 2 பெட்டிகள், ஸ்லீப்பர் கோச்கள் -17 பெட்டிகள், லக்கேஜ் கம் பிரேக் வேன்ஸ் 2 பெட்டிகள் இந்த ரயிலில் இருக்கும். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட் அனைத்தும் முன்பதிவு தொடங்கிய உடனே காலியாகிவிடுகிறது. தட்கல் டிக்கெட் போட்டாலும் பெரிதாக கிடைப்பது இல்லை. இதனால் பயணிகள் வேறு வழியின்றி பேருந்துகளை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பேருந்துகளில் ரயில்களுடன் ஒப்பிடும் போது பல மடங்கு டிக்கெட் கட்டணம் அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் தெற்கு ரயில்வே அறிவித்துள்ள சிறப்பு ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.





















