திண்டுக்கல் : கொலை வழக்குகளில் கைதான தந்தை, மகன் உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை வழக்குகளில் கைதான தந்தை, மகன் உட்பட வெவ்வேறு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பு
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டையை அடுத்த சேடப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன். இவருடைய மகன் அஜித்குமார் (24). இவர்களுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான அழகுவிஜய் என்பவருக்கும் சொந்த பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி இருவரும் சேர்ந்து அழகுவிஜயை கொடூரமாக கொலை செய்துவிட்டு அவருடைய உடலை சாக்குமூட்டையில் கட்டி ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் போட்டுச்சென்றனர்.
இந்த கொலை தொடர்பான புகாரின் பேரில் செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை,மகன் இருவரையும் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இதேபோல் ஆத்தூர் தாலுகா என்.பஞ்சம்பட்டி இந்திராநகர் 3-வது வார்டை சேர்ந்த சந்திரசேகர் தனக்கு திருமணம் செய்ய பெண் தராத ஆத்திரத்தில் கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி அதே கிராமத்தை சேர்ந்த அருள்நாதன் என்பவரை கொலை செய்த வழக்கில் சின்னாளப்பட்டி போலீசார் இவரை கைது செய்தனர்.
Breaking LIVE: நாளை தொடங்க இருந்த பி.இ பொதுப் பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு
மேலும், ஆத்தூர் தாலுகா கொல்லப்பட்டி பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தினேஷ், ஜாதிக்கவுண்டன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த மணிமாலமுருகன் ஆகியோருக்கும், சிறுமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த உத்தப்பன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி இருவரும் சேர்ந்து உத்தப்பனை கொடூரமாக கொலை செய்த வழக்கில் அம்பாத்துரை போலீசார் இவர்களை கைது செய்தனர்.கொலை வழக்குகளில் கைதான தந்தை,மகன் உள்பட 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்கும்படி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகனிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரையும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்