தூங்கி கொண்டிருந்தவர்களை மிரட்டி 31 பவுன் தங்க நகைகள் கொள்ளை - பழனி அருகே பரபரப்பு
மூன்று வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்களை மிரட்டி 31 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற திருட்டு சம்பவம் பழனி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி ஆர்.ஜி. நகரில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்களை மிரட்டி 31 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆர்.ஜி. நகரில் வசித்து வருபவர் கோபி. இவரது மனைவி சர்மிளா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நேற்று இரவு வீட்டில் இருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த மூன்று பேர் கொண்ட கும்பல் சர்மிளாவை கத்தி மற்றும் ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் ஷர்மிளாவின் குழந்தைகளை பிடித்து வைத்துக் கொண்டு சர்மிளா அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் உள்ள நகைகளை எடுத்துக் கொடுக்க சொல்லியுள்ளனர்.
உயிருக்கு பயந்து சர்மிளா வீட்டில் உள்ள 27 சவரன் தங்க நகைகளை எடுத்து கொடுத்தவுடன் கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல் நிலைய போலீசார் திருட்டு நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அதே பகுதியில் உள்ள கருணாகரன் என்பவரின் வீட்டில் நுழைந்த திருடர்கள் நான்கு சவரன் தங்க நகைகளையும் திருடி சென்றுள்ளனர். ஆர்.ஜி. நகரில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளையர் புகுந்து திருடிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கூரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது. கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள் வாகனம் பறிமுதல்.
திண்டுக்கல்-பழனி பைபாஸ் சாலையில் கொட்டபட்டி பிரிவு அருகே தனியார் அலுவலகத்தில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக ஐ.ஜி. தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஐ.ஜி. தனிப்படை காவல் ஆய்வாளர் அழகுபாண்டி, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தப் பகுதியில் உள்ள தனியார் கூரியர் அலுவலகத்தில் சோதனை செய்தபோது அங்கு 2 வாலிபர்கள் கஞ்சாவை பொட்டலம் போட்டு கொண்டிருந்தனர். மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் மவுன்ஸ்புரத்தை சேர்ந்த லோக மணிகண்டன் (வயது 25), நத்தத்தை சேர்ந்த செல்வமருதநாயகம் (25) என்பதும், கூரியர் அலுவலகத்தில் வேலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், ஒய்.எம்.ஆர் பட்டியை சேர்ந்த விஜயகுரு (30), சுப்புராமன் பட்டறையைச் சேர்ந்த தீபக் (21), இசக்கிபாண்டி (20) ஆகிய 3 பேரிடம் கஞ்சாவை மொத்தமாக வாங்கி அதை பொட்டலங்கள் போட்டு, பார்சல் டெலிவரி செய்வதுபோல் நூதன முறையில் கஞ்சாவை வீடுகளில் டெலிவரி செய்தது தெரியவந்தது. இதையடுத்து விஜயகுரு, தீபக், இசக்கிபாண்டி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.