Devar Jayanti : 'யாருக்கும் ஆதரவு கிடையாது..! தங்க கவசத்த நானே எடுத்து வந்து வச்சிருவேன்' - 'ஷாக்' தேவர் நினைவிட பொறுப்பாளர்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை தங்க கவசம் விவகாரத்தில் அ.தி.மு.க. இரு தரப்பாக உள்ளதால், எந்த தரப்புக்கும் ஆதரவு தரமுடியாது என தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனா என்று அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. கட்சியினர் இரு பிரிவாக செயல்பட்டு வருவதால் தேவர் தங்க கவச குருபூஜை விழாவிற்கு வருவது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அ.தி.மு.க.வின் இருதரப்பினரும் நினைவாலய பொறுப்பாளரான காந்திமீனாளிடம் ஆதரவு தரும்படி கோரிக்கை வைத்துள்ள நிலையில், காந்திமீனாள் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ஓ.பன்னீர்செல்வமும், நானும் கையெழுத்துட்டு வங்கியில் இருக்கும் தங்க கவசத்தை குருபூஜை விழாவிற்கு எடுத்து வருவது வழக்கமாக இருந்தது. தற்போது இரு தரப்பாக அ.தி.மு.க.வினர் செயல்பட்டு வருவதால் எந்த தரப்புக்கும் நாங்கள் ஆதரவு தர முடியாது. நானே வங்கிக்கு சென்று தங்க கவசயத்தை எடுத்து வந்து தேவர் சிலைக்கு அணிவிப்பேன்' என தெரிவித்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014ம் ஆண்டு 3.7 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார். அது மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க.வின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த வரை ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவின்போது அவரும், தேவர் நினைவிட அறங்காவலர் காந்திமீனாவும் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்திட்டு கவசத்தை பெற்று, குருபூஜை முடிந்த பின்னர் அதனை மீண்டும் வங்கியில் ஒப்படைப்பது வழக்கம்.
இதற்கிடையில், அ.தி.மு.க. உட்கட்சி பூசல்களால் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தங்க கவசத்துக்கு உரிமை கோருவதற்காக கடந்த செப்டம்பர் 16 அன்று எழுத்துப்பூர்வ கடிதத்தை எடப்பாடி பழனிசாமி சார்பில் திண்டுக்கல் சீனிவாசன் வங்கி நிர்வாகத்திடம் அளித்திருந்தார்.
பின்னர் செப்டம்பர் 30 அன்று வங்கிக்கு நேரில் வந்து கவசத்திற்கு உரிமை கோருவதற்கான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். தொடர்ந்து அக்டோபர் 3 அன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோ.பாலகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.தர்மர் ஆகியோரும் தங்க கவசத்திற்கு உரிமை கோரி பிராமண பத்திரம் தாக்கல் செய்தனர்.
இரு தரப்பினரில் யாருக்கு சட்ட ரீதியான உரிமை இருக்கிறது என ஆராய்ந்து வங்கி நிர்வாகம் எடுக்கும் முடிவு ஒருபுறம் இருந்தாலும், தேவர் நினைவிட அறங்காவலர் காந்திமீனாவின் முடிவும் இந்த விவகாரத்தில் முக்கியமானது. இந்நிலையில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தேவர் நினைவாலய பொறுப்பாளர்களிடம் தனித்தனியாக வந்து ஆதரவு தருமாறு கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ்.மணியன், காமராஜ், செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 7 முன்னாள் அமைச்சர்கள் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாவை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி அணியினருடன் சேர்ந்து வங்கிக்கு வந்து தேவர் ஜெயந்தி விழாவிற்கு தங்க கவசத்தை எடுத்து கொடுக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து மாலை ஓ.பி.எஸ்.ஆதரவாளரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.தர்மர் பசும்பொன் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். காலை எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் உட்பட கட்சி நிர்வாகிகளும், மாலை ஓ.பிஎஸ் ஆதரவாளர்களும் ஒரே நாளில் பசும்பொன் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தந்தை உக்கிரபாண்டிய தேவரின் உடன் பிறந்த சகோதரி மீனாள். இவருடைய மகன் தங்கவேல் தேவர்( முத்துராமலிங்கத் தேவருக்கு மைத்துனர் உறவுமுறை).
தங்கவேல் தேவரின் மகள் காந்தி மீனாள்(தற்போதைய வாரிசு). பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 1963ம் ஆண்டு இறந்தவுடன் காந்தி மீனாளின் தந்தை தங்கவேல் தேவர் பசும்பொன்னில் தேவருக்கு நினைவிடம் அமைத்தார். அன்றிலிருந்து 1973ம் ஆண்டு வரை தங்கவேல் தேவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தேவதை நினைவாலயத்தை பராமரித்தும், பாதுகாத்து வந்தனர். 1973ம் ஆண்டு தங்கவேல் தேர்வு மறைந்தார். அவரது மறைவுக்கு பின்னர் முத்துராமலிங்க தேவரின் மைத்துனரான தங்கவேல் தேவர் மகள் காந்தி மீனாள் மற்றும் அவரது உறவினர்கள் தற்போது வரை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தை பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.