பாஜகவும்,அதிமுகவும் டெல்டா விவசாயிகளை வைத்து அரசியல் செய்கிறது. அமைச்சர் சக்கரபாணி பரபரப்பு குற்றச்சாட்டு!
2021 தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றதால் நெல்-லை வைத்து பாஜக - அதிமுக அரசியல் செய்ய பார்க்கிறார்கள் - அமைச்சர் சக்கரபாணி பேட்டி

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பிஎஸ்என்ஏ கல்லூரி கலையரங்கில் நடைபெறும் முதலமைச்சர் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, 29 லட்சம் மகளிர் உரிமைத் தொகைக்காண விண்ணப்பங்கள் வந்துள்ளது. டிசம்பர் 12 சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதில் தகுதி இருந்தும் கிடைக்கவில்லை என்றால் கோட்டாட்சியருக்கு மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
டெல்டா மாவட்டம் நெல் கொள்முதல் குறித்த கேள்விக்கு, அக்டோபர் 1 முதல் குறுவை நெல் கொள்முதல் பணி நடைபெறும். டெல்டா மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பெயரில் ஈரப்பத சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என கடிதம் எழுதப்பட்டது. அதன் பேரில் முதலமைச்சர் அனுமதி பெற்று துறையின் செயலாளர் மத்திய செயலாளருக்கு கடிதம் எழுதினார்.
உடனடியாக தமிழகத்திற்கு 3 மத்திய குழுக்கள் வந்து பார்வையிட்டனர். குழு பார்வையிடும் பொழுது நெல்லின் ஈரப்பதம் 20% முதல் 25% வரை இருந்தது. ஆனால் அனுமதி வழங்கவில்லை. நெல் ஈரப்பதம் 17% இருந்து 22% ஆக அதிகரிக்க வேண்டும் என சென்னைக்கு வந்திருந்த மத்திய அமைச்சரிடமும் நான் மற்றும் துறை சார்ந்த அலுவலருடன் இணைந்து கடிதம் கொடுத்திருந்தோம்.

செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல் குறித்த கேள்விக்கு, செறிவூட்டப்பட்ட அரிசி 100 கிலோவிற்கு 1 கிலோ கலக்க வேண்டும் என விதி இருந்தது. ஜூலை மாதம் முதல் மத்திய அரசு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது. அதன்படி 34,000 டன் கொள்முதலுக்கு 5 ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்கியிருந்தோம். 10 மெட்ரிக் டன் -க்கு 1 சாம்பிள் என மத்திய அரசு கூறியிருந்தார்கள். அதற்கும் விதிவிலக்காக 25 மெட்ரிக் டன்னுக்கு ஒரு சாம்பிள் எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தோம். ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா தமிழ்நாடு ஆகிய இடங்களில் அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் நெல் ஆய்வு செய்வது வட இந்தியாவில் உள்ளது. ஆய்வு மையத்தை தென்னிந்தியாவிற்கு கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தோம்.
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி நெல் கொள்முதல் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் பேசினார். ஆனால், அதற்கு யாரும் பதில் அளிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நெல் ஆய்வு செய்து சென்றனர். அவர்களாவது அனுமதி வாங்கி கொடுக்கலாம். அன்புமணியும் கூட்டணியில் உள்ளார். அவரும் வாங்கித் தரவில்லை.
2021 சட்டமன்றத் தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. அதனால் நெல்லை வைத்து அரசியல் செய்யலாம் என நினைக்கின்றனர். அதற்கு எப்பொழுதும் வாய்ப்பு இல்லை. டெல்டா மாவட்ட விவசாயிகள் முதலமைச்சர் நெருக்கமாக உள்ளனர். தற்போது விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் முதலமைச்சர் கொடுத்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டர் ரூ 20 ஆயிரம் இழப்பீடு தருவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஈரப்பதம் மற்றும் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து மத்திய அரசு காலம் தாழ்த்துகின்றனர் தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் பிரச்சனை குறித்த கேள்விக்கு, அதிமுக 2014ல் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அப்படி என்றால் அந்த தீர்ப்புக்கு அதிமுக உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைப்பற்றி பேச மறுக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சமூகநீதி சமத்துவத்தை காக்கின்ற மாநிலம். இதுகுறித்து முதலமைச்சரஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர்கள் பலர் நீக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு, தேர்தல் ஆணையம் 11ஆம் தேதி வரை கால அவகாசம் நீடித்துள்ளனர். சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இறந்த வாக்காளர்கள், இரு முறை பதிவாகியுள்ள நபர்கள், இடம் பெயர்ந்து சென்றவர்கள் இவர்களை கண்டுபிடிக்க முடியாதவர்கள் என சேர்த்துக் கொள்ள கூறியுள்ளனர். 14ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளிவந்த பின்பு Form 6 மூலம் சேர்த்துக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. என தெரிவித்தார்.





















